பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

* 2000ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாகக் கற்றுத் தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் சிற்றுர்களில் படிக்கும் மாணவர்கள் கணினி அறிவியல் நுட்பங்களை தாய்மொழியாகிய தமிழ்மொழியிலேயே கற்க இருக்கின்றனர்.

இந்தக் காரணத்தினால், கணினித் தமிழ்ச் சொல்லகராதி யின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத் தேவையை முன்கூட்டியே எதிர்பார்த்த அறிவியல் தமிழ் அறிஞர் திரு மணவை முஸ்தபா அவர்கள் மேற்கொண்ட முயற்சி, இதுவரை இருந்து வந்துள்ள வெற்றிடத்தை நிரப்பச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச் சரியான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

மணவையாரின் அறிவியல் தமிழ்ப்பணி

அறிவியல் தமிழ்ப் பணிக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் திரு மணவை முஸ்தபா அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்ததுமே, சேலம் அரசுக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கான ஆணையைப் பெற்றார். தம் பேராசிரியர்களிடம் வாழ்த்துப் பெற சிதம்பரம் சென்றார். அங்கு நடைபெற்ற "பயிற்சி மொழி தமிழா? ஆங்கிலமா?" என்ற கருத்தரங்கு இவர் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. "அனைத்து அறிவியல் துறைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன. அவற்றை தமிழில் கற்பது முடியாத செயல். பயிற்சிமொழி தமிழ் என்பது கானல் நீர் " என்று ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார். வெகுண்டெழுந்த மணவையார், "தமிழால் முடியும். சொல்வதோடு நில்லாமல் செயல்மூலம் தமிழால் முடியும் என்பதை நிறுவிக் காட்டுவேன். இன்று முதல் இதுவே என் வாழ்வின் ஒரே இலட்சியம். அறிவியல் தமிழுக்காக என் வாழ்வையே அர்பணித்துக் கொள்கிறேன்" என்று முழங்கியதோடு மட்டுமின்றி, கையிலிருந்த ஆசிரியர் பணிக்கான ஆணையை அங்கேயே கிழித்துப் போட்டார். அன்று முதல் அறிவியல் தமிழ் ஒன்றை மட்டுமே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இன்றுவரை அந்தப் பாதையிலேயே நடைபோட்டு வருகிறார்.

தென்மொழிகள் புத்தக டிரஸ்டில் தமிழ்ப் பதிப்பாசிரிய ராகப் பணியில் சேர்ந்து, மொழிபெயர்ப்புப் பணியை தன் முழுநேரப் பணியாக மேற்கொண்டார். 1967ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் 'கூரியர் தமிழ்ப் பதிப்பு ஆசிரியராகப் பொறுப்பேற்று கடந்த 32 ஆண்டுகளாக அப்பணியை செவ்வனே நிறைவேற்றி வருகிறார். உலகிலுள்ள முப்பது

32