பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Line surge என்ற சொல்லுக்கு மின்சார வெள்ளம், மின்தொடர் எழுச்சி என்று பொருள் கூறி, திடீரென்று உயர்ந்த வோல்ட் மின்சாரம் பாயும் நிலை என்ற விளக்கம் கூறி, உயர்வோல்ட் மின்சாரம் திடீரென்று குறுகிய காலத்திற்குப் பாய்வதால், தவறான பதிவு, தவறான செயல்பாடு, தகவல்கள் இழத்தல், சில சமயங்களில் கணினியில் மிகவும் நுண்ணிய இணைப்புகள், தகவல் உள்ளிட்டு முனையங்கள், தகவல் பரிமாற்றச் சாதனங்களின் அழிவு முதலியன ஏற்படுவது உண்டு என்று அதன் விளைவுகளைக் கூறி, திடீரென்று மின்சார டிரான்ஸ்பார்மர்களை இயக்குதல், பிற துணைக் கருவிகளை இயக்குதல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படுவதுண்டு என்று அதன் காரணங்களையும் எடுத்துக் கூறுவதுடன் நில்லாமல், உயர்வோல்ட் மின்சாரம் திடீரென்று பாய்வதைத் தடுக்கும் சாதனங்களால் கருவிகளைப் பாதுகாக்கலாம் என்று பாதுகாப்பு வழிமுறையையும் கூறுவதைப் பார்க்கும்போது அகராதி, கலைக் களஞ்சியம் என்கிற வரம்புகளையும் உடைத்தெறிந்து ஒரு புதிய பரிமாணத்தையே எட்டிவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவதை Geek என்று கூறுகிறார்கள். அதனை 'கற்றுக்குட்டித்தனம் என்று நாகரிகமான முறையில் மொழிபெயர்த்துள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது. Eavesdropping என்பதை 'ஒற்றுக் கேட்டல்' என்கிறார். Hacker-களைக் 'குறும்பர் எனச் செல்லமாகக் குறிப்பிடுகிறார். Paddle என்பதைத் துடுப்பு, மத்து என மொழிபெயர்க்கிறார். Menu tem என்பதைப் பட்டி உருப்படி' என்கிறார். Packet என்பதைப் பெதிவு, பொட்டலம் என்று குறிப்பிடுகிறார். Pattern என்பதை தோரணி, தினுசு என்கிறார். இவ்வாறு, தமிழ்பேசும் மக்களிடையே பேச்சு வழக்கில் பயன்படுத்தக் கூடிய பொருள் பொதிந்த பொருத்தமான தமிழ்ச் சொற்களை மொழியாக்கமாகக் கொடுத்திருக்கும் பாங்கு திரு. மணவையாருக்கே உரிய தனித்தன்மை என்றே கூற வேண்டும்.

அதேவேளை, பழந்தமிழ் இலக்கியங்களில் பயன் படுத்தப்பட்டுள்ள தூய்மையான இலக்கியச் சொற்களையும் தோண்டியெடுத்துப் புத்துயிரூட்டி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.