பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

கணினித் துறையின் விரிவான, வலுவான வளர்ச்சி உலகளாவிய முறையில், மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் தன் செல்வாக்கை அழுந்தப் பதித்து வருகிறது. கணினியின் துணையின்றி அரையங்குல வாழ்வைக்கூட நம்மால் நகர்த்த முடியா நிலை விரைந்து உருவாகி வருவதை நன்கு உணர முடிகிறது. எனவே, இன்றைய - நாளைய கல்விமுறை கணினியை அடிப்படையாகக் கொண்டு அமைவது தவிர்க்க முடியாததொன்றாகும் எனில் அஃது மிகையன்று.

கணினிக் கல்வி 'தமிழ் வழி' அமைய வேண்டுமெனில் அதற்கு உந்து சக்தியாயமைய கணினிக் கலைச் சொல்லாக்கப் பணி உடனடியாக நடைபெற்றாக வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.

பதினைந்து ஆண்டுகட்கு முன்பு 'கணினி'சிறப்பிதழாக யுனெஸ்கோ கூரியர் திங்களிதழ் வெளிவந்தது. அவ்விதழ் தயாரிப்பின்போது ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தம் புதிய கணினிக் கலைச் சொற்களைத் தமிழில் உருவாக்கி வெளியிட வேண்டிய கட்டாயச் சூழல். தக்கவர்களின் துணையோடு அவற்றை உருவாக்கிப் பயன்படுத்தினேன். வாசகர்களிடம் மிகச் சிறந்த வரவேற்புக் கிடைத்தது. கணினி கலைச் சொல்லாக்கப் பணியை மேலும் தொடர வேண்டும் என்ற வேட்கை என்னுள் அழுத்தம் பெற்றது. அதன்பின் நான் வெளியிட்ட மருத்துவ, அறிவியல், தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூலில் கணிசமான எண்ணிக்கையில் கணினித் தமிழ்க் கலைச் சொற்களை இடம் பெறச் செய்தேன். எட்டாண்டுகளுக்கு முன் கணினித் தொழில் நுட்பவியலின் எதிர்காலம் குறித்து, உலகளாவிய ஆய்வுக் கட்டுரைகளை யுனெஸ்கோ கூரியர்' இதழில் வெளியிட்டபோது, கணினித் தொழில் நுட்ப வளர்ச்சி, இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அதன் வளர்ச்சி எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் இருக்க வேண்டும் என்பதை முனைப்புடன் சிந்திக்கத் தொடங்கிய போது தான், மலரவிருக்கும் பொற்காலத் தமிழகத்திற்கு மிகப் பெரும் உந்து விசையாக கணினிக் கல்வியும், அதைத் தொடர்ந்து கணினித் தமிழும் அமைவது ஒருவகைக் காலக் கட்டாயம் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

கணினித் தமிழ் நூல்கள் நூற்றுக்கணக்கில் எழுதிக் குவிக்கப்பட வேண்டிய அவசிய, அவசரத் தேவை. அத்தேவையை நிறைவு செய்ய விழையும் திறனாளர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமில்லை. பொருளறியும், தமிழறிவும், எழுத்தாற்றலும் மிக்கவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், அவர்கட்கு இருக்கும் பெருந்தடை கலைச்சொற்கள். மொழியியலறிவும் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியும் இலக்கணப் புலமையும் இருந்தாலொழிய புதுப்புது கலைச்

5