பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரந்த எழுத்துகள் எனக் கருதப்படும் ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ போன்ற எழுத்துகள் சமஸ்கிருத வரி வடிவங்கள் அல்லவே அல்ல. அவை ஒளி வடிவங்கள் மட்டுமே. சில சம்ஸ்கிருத ஒலிகளை உரிய முறையில் வெளிப்படுத்த தமிழில் எழுத்துகள் இல்லை என்ற குறைபாட்டை நீக்க, பல்லவர்கள் காலத்தில் காஞ்சி மாநகரில் தமிழ் வரிவடிவச் சாயலில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் கன்னடத்திலோ தெலுங்கிலோ இல்லை. தமிழிலும் தமிழிலிருந்து கிளைத்த மலையாளத்திலும் மட்டுமே உள்ளன. அதிலும் கிரந்த எழுத்துகள் பலவாக இருந்தாலும் இந்த நான்கைந்து எழுத்துக்களை மட்டுமே தமிழ் பட்டும்படாமலும் தன்னுடன் உறவாட அனுமதித்து வருகிறது. எனவே, ஆங்கில எழுத்தொலியை ஒலி பெயர்ப்பின் போது முழுமையாக பெற இக்கிரந்த எழுத்துகளைபயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்றே கருதுகிறேன்.

இவ்விரண்டாம் தொகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. பயன்பாட்டுக்கு வந்திருப்பினும் ஆங்கில அகராதியில் இடம்பெறாத பல புதிய சொற்கள் இவ்விரண்டாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இதற்காக அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் நாடுகள் சென்றிருந்தபோது இக்கலைச் சொற்களைச் சேகரிக்க இயன்றது. ஆங்கில அகராதிக்கும் முந்தி, தமிழ் அகராதியில் நேர்ச் சொல்லாக்கம் இயல்கிறதென்றால் தமிழ் இயல்பிலேயே ஆற்றல்மிக்க அறிவியல் மொழி என்பது தெளிவாகிறதன்றோ!

இவ்விரண்டாம் தொகுதி சிறப்பாக வெளிவரப் பெருந்துணையா லமைந்தவர் கணினித் துறை வல்லுநரும் என் கெழுதகை நண்பருமான திரு. மு. சிவலிங்கம் அவர்களாவர். தமிழறிவும் அறிவியலறிவும் எழுத் தாற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அவர், இந்நூல் சிறப்பாக அமைய எல்லா வகையிலும் ஒத்துழைத்து உதவியதை என்னால் மறக்கவே முடியாது. அன்னாருக்கு என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நூல் தயாரிப்பின்போது கனடா வந்த எனக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்து, கணினி அகராதிப் பணி இனிது நிறைவேறப் பெருந் துணையாயமைந்த ஈழத்துக் கெழுதகை நண்பர் திரு. இராஜரத்தினம் அவர்கட்கும் இச்சமயத்தில் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் இன்று 1,250 பக்கங்களைக் கொண்ட இரண்டு கணினிக் கலைச்சொல் தொகுதிகளைத் தமிழில் வெளியிட இயன்றதென்றால், அதற்கு என் திறமையோ இப்பணியில் இணந்து பணியாற்றும் நண்பர்களின் திறமையோ மட்டும் காரணமில்லை. தமிழின் தனிப்பெரும் ஆற்றலே காரணம். ஏனெனில், இயல்பிலேயே தமிழ் ஒர் அறிவியல் மொழியாக, அறிவியலைச்சொல்வதற்கென்ற உருவான மொழியாக அமைந்திருப்பதுதான்.

மணவை முஸ்தபா
நூலாசிரியர்
12