பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை

இரண்டாண்டுகட்கு முன்னர் 'கணினிக் கலைச்சொல்களஞ்சிய அகராதி' எனும் தலைப்பில் முதல் தொகுதியை வெளியிட்ட திரு. மணவை முஸ்தபா, இப்போது 'கணினிக் களஞ்சிய அகராதி' எனும் பெயரில் இரண்டாம் தொகுதியை வெளிக் கொண்டு வந்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் காலூன்றிய கணினித் துறை இப்பத்தொராம் நூற்றாண்டில் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வளமாக வளர்ந்து வருகிறது. அதன் வலுவான வளர்ச்சி நாளும் நம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் வளர்ச்சிப் போக்குக்கு ஈடு கொடுப்பதன் மூலமே தமிழ் தன் ஆற்றலை நிலை நிறுத்தவும் பெரு வளர்ச்சி காணவும் இயலும்.

முதல் தொகுதியில் இடம் பெறாத, அதே சமயத்தில் மேலை நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ளபோதிலும் ஆங்கில மொழி கணினி அகராதிகளில் இடம் பெறாத, கணினிக் கலைச் சொற்கள் பலவற்றைக் கொண்ட புதுமை அகராதியாக - 'தமிழ் ஒர் ஆற்றல்மிக்க அறிவியல் மொழி'யே - என்பதை செயல் வடிவில் எண்பிக்கும் ஆவணமாக இவ்விரண்டாம் தொகுதியை உருவாக்கியிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இதற்காக நூலாசிரியர் திரு. மணவை முஸ்தபா அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் முதலான நாடுகட்குச் சென்று கணினிக் கலைச் சொற்களைத் திரட்டி வந்துள்ள பாங்கு, அறிவியல் தமிழ் வளர்ச்சியில் இவருக்குள்ள நாட்டத்தை விண்டுரைப்பதாயுள்ளது.

இந்நூலை வெறும் கலைச்சொல் பட்டியலாக அமைக்காது, ஆங்கிலக் கலைச் சொல்லுக்குத் தமிழ் நேர்ச் சொல், சொல் விளக்கம், பொருள் விளக்கம், பட விளக்கங்களோடு தந்துள்ளார். இதனால், ஆங்கிலச் சொல்லை படிக்கத்தெரிந்த யாரும் அதன்மூலம் ஒரு அறிவியல் செய்தித் துணுக்கைப் பெற்று, தங்கள் கணினி அறிவியல் அறிவை வளர்த்து வளப்படுத்திக் கொள்ள இயலும். சுருங்கச் சொன்னால் அகராதியாகவும், களஞ்சியமாகவும் ஒரே நேரத்தில் பயன்படத்தக்க 'களஞ்சிய - அகராதி' போக்கில் அமைந்த புதுமை நூலாகும் இது.

இதுவரை அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவத் துறைக்கான ஐந்து 'கலைச்சொல் களஞ்சிய அகராதி'களை உருவாக்கி வெளியிட்டுள்ள திரு. மணவையார் ஆறாவதாக இக்கணினிக் களஞ்சிய அகராதியை வெளிக்கொண்டு வந்து புது வரலாறு படைத்துள்ளார். இந்த அகராதிகள் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகளிலேயே முதல் நூல்களாகும் என்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்துள்ள மிகப்பெரும் பெருமையாகும்.

'காலவோட்டத்திற்கேற்ப நாம் செயல்படாவிட்டால் காலம் நம்மைப் பின்னுக்குத் தள்ளி முன்னோக்கிச் சென்றுவிடும்' என்ற பேருண்மையை அழுத்தமாக உளத்திற்கொண்டு, முனைப்போடு செயல்பட்டுவரும் திரு. மணவை முஸ்தபா அவர்களின் முயற்சியையும் அதற்குத் துணை நிற்பவர்களின் உதவி ஒத்துழைப்புகளையும் நாம் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

சென்னை- 25
20.12.2001

டாக்டர் ஆ. கலாநிதி
துணைவேந்தர்
அண்ணா பல்கலைக் கழகம்.
14