இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
மாசாத்து வான்நல் வாணிகன்
மாபெரும் தவத்து மைந்தன்
நேசத்துக் கோவலன் என்பான்
நேரில்லாப் பேரழகு அன்பான்
மண்ணகம் பரவிய புகழான்
மங்கையர்கள் ஏத்தும் எழிலான்
பண்ணமையச் செவ்வேள் என்று
பாராட்டும் சீரார் வீரன்
பதினாறு வயதுப் பருவம்
பாலனெழில் சீலன் கோவலன்
மதிமுகத்து மாதர் கண்ணகி
மகிழ்பன்னீ ராண்டு அடைந்தாள்
உலவநலம் பருவ நலங்கள்
உயர்வுடைய காதல் உளங்கள்
திருவுடைய இருவர் தமையும்
திகழமணம் செய்ய நினைந்தார்
வள்ளலாம் மாசாத்து வானும்
மாநாய்கச் செல்வன் தானும்
தெள்ளுபே ரறிஞர்கள் முன்னே
திருமணம் உறுதி செய்தார்
மணத்திற்கு நன்னாள் கண்டார்
மனத்தினுக் கினியன கொண்டார்
குணத்திற்கு மின்னார் பல்லோர்
குவலயம் சொல்ல எழுந்தார்
மங்கலநற் பெண்கள் பல்லோர்
வருங்குன்ற யானைகள் மேலே
பொங்குமணம் சொல்ல எழுந்தார்
புனிதவாத் தியங்கள் முழங்க