பக்கம்:கண்ணகிக் கதை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கண்ணகி கதை



13

திங்கள் உரோகிணியைக் கூடும்
        செய்யமணம் தங்கும் நாளில்
மங்கலநல் லோரை யதனில்
        மணவிழா நடக்கும் என்றார்

வசனம்

ஆண்டின் பன்னிரு மாதங்களையும் ஆறு பருவங்களாகப் பகுத்திருக்கிறார்கள். இவ்விரு மாதங்கள் ஒவ்வொரு பருவமாகக் கொள்ளப்படும். சித்திரையும் வைகாசியும் தித்திக்கும் இளவேனிற்காலம். மணந்தார்க்கு இன்பமும் தணந்தார்க்கு - பிரிந்தவர்க்குத் துன்பமும்தரும் காதல் கருவேளுக்குரிய காலம். இந்த மாதங்களில்தான் தமிழ் நாட்டில் சிறப்பாகத் திருமணம் நடைபெறும். சந்திரனுக்கு இருபத்தேழு நட்சத்திரங்களும் இன்பம் அளிக்கும் அன்பு மனைவியர்கள். அவற்றுள் உரோகிணியிடத்து அளவற்ற காதலுடையவன் சந்திரன்; அவன் உரோகிணியைக் கூடுகின்றநாள் மணத்திற்குரிய சிறந்தநாள் எனத் தெரிந்து கண்டனர் நம் முன்னோர். உரோகிணியைக் கூடினநாளில் சந்திரன் உச்சனாதலால் எவ்வகையான தீங்கும் நீங்கும் என்பது பாங்கான கருத்து. சித்திரைத் திங்கள் வளர்பிறை நாளில் உரோகிணி நன்னாள் வந்துற்றது. அந்த நல்லநாளிலே,

பாட்டு

மங்கல முரசு முழங்கியதே
        மாமுருடு அதிர்ந்து கறங்கியதே
சங்கின முழங்கி யொலித்தனவே
        தண்ணுமை இன்னிசை யார்த்தனவே
வயிர மணித்தூண் நாட்டியிட்டார்
        மாலைகள் வரிசையாய்த் தொங்கவிட்டார்