26
சுந்தரத் தோகையர் ஆடவர்கள் நாளும்
சுற்றி உலாவியே இன்பத்தில் ஆழும்
பிறப்பிறப் பில்லாத பெருமானின் கோயில்
பெம்மான் முருகவேள் திருமாலின் கோயில்
சிறப்பார் திருக்கோயில் எங்கும் விழாக்கள்
செய்ய பூசனைகள் தங்கும் விழாக்கள்
அங்காடிப் பூதத்திற் கன்பான பொங்கல்
அரியமறக் குடிமாதர் அழகாக இட்டார்
மங்கலக் குரவைநற் கூத்தினை அடித்தார்
மணிமுடிச் சோழனும் வாழ்கென்று துதித்தார்
மாடமா ளிகையெங்கும் மங்கலக் கொடிகள்
மன்றங்கள் வீதிகள் தோரணப் பிடிகள்
கூடகோ புரமெலாம் குலவும்பொற் படிகள்
கூடுநாற் சந்தியில் ஒலிக்குமே துடிகள்
அறவுரை விரிவுரை எங்கும் முழங்கும்
அரியசொற் பொழிவுரை பொங்கித் துலங்கும்
மறவர்கள் வீரங்கள் காட்டித் திகழ்வார்
மதிமுக மாதர்கண் காட்டியே மகிழ்வார்
எவ்விடமும் இன்பமே பொங்கிக் குலாவும்
ஏற்ற சுடர்விளக்கு எங்கும் நிலாவும்
செவ்விபூ ரணகும்பம் சேர்ந்தே விளங்கும்
சீரான பாலிகை வீறித் துலங்கும்
பெண்டிர் ஆடவருடன் கடலாட வந்தார்
பேதை மாதவியும் கடலாட வந்தாள்
அண்டர் கோனென்னக் கோவலனும் வந்தான்
ஆர்ந்த பரிவாரம் சூழ்ந்து வர வந்தான்
குதிரைகள் பூட்டிய தேரேறி வந்தார்
கோவலனும் மாதவியும் கடலாட வந்தார்