உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகிக் கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கண்ணகி கதை

57

வசனம்

இங்ஙனம் பாண்டியனைப் பாராட்டிய சேரன், பக்கமிருந்த தன் பட்டத்தரசியைநோக்கினான். "வேண்மாள்!கணவனுடன் உயிர்நீத்த கற்பரசி-பாண்டியன் தேவி, சினத்துடன் நம் சேரநாடு நோக்கி வந்த சீரிய கற்பரசி கண்ணகி, இவ்விரு பெரும் பத்தினியருள்ளே,பேணத் தக்க பெருமையுற்றவர் யார்?" என்று கேட்டான். அது கேட்ட அரசி, "காதலன் துன்பத்தைக் காணாது உயிர் நீத்த கற்பரசி -பாண்டியன் பெருந்தேவி விண்ணுலகில் சிறப்புப் பெறுவாள்; ஆனால் நம் நாட்டை நோக்கி கடந்துவந்த நங்கையர் திலகம் மங்கையர்க் கரசி-மாபெரும் பத்தினி-கண்ணகியாம் பெண்ணங்கைப் பேணி வழிபட வேண்டும்,"என்று பதில் சொன்னாள் 'அவ்விதமே செய்வோம்'என்று,அரசன் அமைச்சரை நோக்கினான். 'கண்ணகியின் உருவம் அமைத்தற்குரிய அரிய கல்லை, இமயத்தில் எடுத்துக் கங்கையில் நீராட்டிக் கொண்டு வருவோம்" என்றுரைத்து நின்றார்கள் அமைச்சர்கள். அங்ஙனமே இமயத்தில் கல்லெடுத்து, இன்னீர்க்கங்கையில் பொங்கு புனலாட்டி, மங்கல மடந்தைக்கு-மாபெரும் பத்தினிக்கு - கற்பரசி கண்ணகிக்குப் பொற்புடைய வடிவம் சமைத்தார்கள். வஞ்சிமா நகரில் வளமான கோயில் அமைத்தார்கள். அந்தத் திருக்கோயிலில் செந்தமிழ்க் கற்புத் தெய்வத்தை அமைத்தார்கள் பன்னாட்டு மன்னர்களும் படைகள் புடைசூழ் வந்து வணங்கி வழிபட்டார்கள்.

பாட்டு

பத்தினிக் கண்ணகியின் பரசும் திருக்கதையை வித்தகர் இளங்கோவும் மெத்த அறிந்திட்டார்
புத்தம் புதியகதை பூவுலகு நிகழ்ந்தகதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/56&oldid=1298074" இலிருந்து மீள்விக்கப்பட்டது