பக்கம்:கண்ணகிக் கதை.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கண்ணகி கதை

வளங்கள் பலவும் நிறைந்த நாடு
வண்மை உழவர் மலிந்தகாடு
களங்கள் எங்கும் யானை உலவும்
கார்வளம் கொழிக்கும் நாடு
சோறு மடை அடைக்கும் நாடு
சோழன் அரசு ஆளும் நாடு
வீறு கொண்ட வீரர் வாழும்
மேன்மை மிக்க பொன்னி நாடு.
இத்தகு பொன்னி இன்ப நாட்டின்
எழில் நிறைந்த தலைநகராகும்
மெத்த வுயர் அகத்திய மாமுனி
மேவு பொதிய மாமலை போலும்
உமையொரு பாகன் உறையும் மாமலை
உயர்ந்த கங்கை பொங்கும் ஓர்மலை
இமய மாமலை போல் இலங்கும்
இனிய மாநகர் புகார் ஐயா !
காவிரி யாறு கடலொடு சேரும்
கவின் துறை யதிலே சாரும்.
காவி ரிப்பூம் பட்டினம் எனவே
கற்ற வர்கள் அதனைக் கூறும்
பகைவர் அங்குப் புகாரோ ஐயா!
பதியில் வாழ்வார் வேறு புகாரோ !
தகைமை மிக்க அந்த ஊரைச்
சாற்றினர்கள் புகார் எனப்பேர்.
புகழும் போகமும் பொங்குநல் லூராம்
புத்தே ளிர்வாழ் பதியென லாகும்
தகவும் இன்பமும் தழைக்கும் ஊராம்
தாவில் சீரார் நாகர்தம் ஊரோ !