உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகி தேவி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கண்ணகி தேவி

புகுந்தான்; புகுந்தவன்."மூதூர் வாழ்க! வானம் மும்மாரி மொழிக! மன்னவன் செங்கோல் தழைக்க! அறிவின் மிக்கோரே, பெரியோர்கள் இந்திரவிழா நடாத்தத் துணிந்துள்ளார்கள். இந்திரவிழா நடக்கும் காலத்தில் தேவர்கள் யாவரும் தங்கள் சுவர்க்கம் பொலிவிழக்கும்படி இங்கு எழுத்தருள்வார்களாதலால், வீதிகளில் பூரண கும்பங்களும் பொற்பாலிகைகளும் பாவை விளக்குகளும் நிரைநிரையாக நிரப்புங்கள்; குலைக்கமுகும் குலைவாழையும் கட்டும் இடங்களிற் கட்டுங்கள், பத்தித் தூண்களில் முத்துத்தாமங்களை முறைமுறையாக நாற்றுங்கள்; விழா வீதிகளிலும் மன்றங்களிலும் பழமணல் மாற்றிப் புதுமணற் பரப்புங்கள், கொடிச் சீலை மகரதோரணங்களை மாடங்களிலும் வாயில்களிலும் சேர்த்து அலங்கரியுங்கள்; சிவபெருமான் முதல் சதுக்கபூதம் இறுதியாகிய தெய்வங்களுக்குச் சிறப்பும் பூசனையும் செய்யுங்கள். தருமோபதேசம் புரிபவர்கள் பந்தல்களிலும் அம்பலங்களிலும் நின்று பிரசங்கம் செய்யுங்கள். ஒட்டியசமயவாதிகள் பட்டிமண்டபங்களில் வாதம் புரியுங்கள்; யாருடனும் கோபமும் பகையும் கொள்ளாதீர்கள்." என்று முதலில் ஊரையும் அரசனையும் வாழ்த்தி, முரசை முழக்கி விழாவைச் சாற்றினான்.

அவ்வளவில் நகரம் அலங்கரிக்கப்பட்டது. ஊரார் பலவித வாத்தியம் முழங்கச் சடங்குகளுடன் கற்பகத்தரு நிற்குங் கோயிலில் ஐராவத உருவமெழுதிய கொடியை ஏற்றி, தண்ணிய காவிரியின் புண்ணியநீரைப் பொற்குடத்துக்கொணர்ந்து, “உரைசால் மன்னன் கொற்றம் கொள்க!” என வாழ்த்தி, இந்திரன் முடியில் திருமஞ்சனம் செய்தனர். சிவபெருமான் திருமால் பலதேவன் முதலிய தெய்வங்கட்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/16&oldid=1410946" இலிருந்து மீள்விக்கப்பட்டது