பக்கம்:கண்ணகி தேவி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கண்ணகி தேவி

சுவையுடையனவாயிருக்கக்கண்டு, “இவர் என்மேல் அன்பிலார்; வேறு மகளிரிடத்து அன்புள்ளார்.” என்று தன்னுள் நினைத்து, தன் கோபத்தை வெளிக் காட்டாது, கோவலன் கையிலிருந்த வீணையை வாங்கித் தனக்கு வேறொரு எண்ணமில்லாவிடினும் தான் வேறு கருத்துடையவள் போலக் கோவலனுக்குத் தோன்றும்படி, பல வகையான வரிப்பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வீணையை வாசித்தாள். அதனைக் கேட்ட கோவலன், “இவள் வேறொருவன் மேல் மனம் வைத்து இவ்விதம் பாடினாள்,”என்று எண்ணி ஊழ் வசத்தால் மாதவிமீது வெறுப்புக்கொண்டு அவளை விட்டுப் பிரிந்து, ஏவலாளர் புடைசூழப்புறப் பட்டுத் தன் அகம் நோக்கிச்சென்றான், அதன்மேல் செய்வது இன்னதென்று அறியாது மயங்கி மாதவியும், தோழிமார்களுடன் தன் இல்லம் சென்றாள்; சென்று கோவலனது பிரிவாற்றது வருந்தி, கோவலனுக்குத் திருமுகம் போக்கக்கருதி ஒருதாழைமடலில் தனது பிரிவாற்றாமையைக் குறிப்பிட்டுப் பன்னிப் பன்னி எழுதி,அதனை வசந்தமாலைகையிற்கொடுத்து, "இதனைக் கோவலர்க்குக் காட்டி அழைத்து வருக" என்று ஆவளை அனுப்பினாள். வசந்தமாலையும்சென்று கோவலனைக் கூல வீதியிற்கண்டு, திருமுகத்தைக் கொடுக்க நெருங்கினாள். அவன் அதனை வாங்காது, "வசந்தமாலாய், பொய்யை மெய்யாகக் காட்டி யொழுகும்மாய்கைச் செய்கை, நாடகமகளாகிய மாதவிக்கு இயற்கையன்றோ?" என்று வெறுத்துக்கூறி மறுத்துவிட்டான். வசந்தமாலை சென்று இதனைத் தெரிவிக்க, மாதவி கேட்டு வருந்தி, "கோவலர் என் மீது மாறாத அன்புள்ளவராகையால், மாலையில் வருவார்; மாலையில் வாராராயினும், காலையில் வருவார்." என்றே சொல்லிக்கொண்டு, அவலநெஞ்சத்தோடு மஞ்சத்தில் படுத்தபடியே இமையோடு இமை பொருந்தாது கிடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/18&oldid=1411045" இலிருந்து மீள்விக்கப்பட்டது