பக்கம்:கண்ணகி தேவி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கண்ணகி தேவி

மூட்டையையும் மயிற்பீலியையும் தூக்கி அவர்களுடன் புறப்பட்டாள்.

அவர்கள் செல்லுகின்ற வழியில், காவிரியின் நீர், வாய்த்தலைக் கதவின் மீதெழுந்து குதிக்கும் ஓசையும், செந்நெல்லும் கரும்பும் வளர்ந்த கழனிகளின் அருகிலுள்ள நீர் நிலைகளில்

'கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலுப் புள்ளும் புதாவும்'

ஆகிய நீர்ப்பறவைகள் கூடியிருந்து ஒலிக்கும் ஓசையும், பொன்னேர் பூட்டி நிலத்தை உழுவார் பாடும் ஏர்மங்கலப்பாட்டின் ஓசையும், நாற்று நடும் கடைசியர்கள் குரவை ஒலியும், களத்தின் கண் நெற்பொலி செய்வார் பாடும் முகவைப் பாட்டோசையுமான பலவித ஓசைகளையும் கேட்டு இன்புற்று வழி வருத்தந்தோன்றாமல், காவிரிக்கரை வழியாக நாளொன்றுக்குக் காதவழி நடந்து சீரங்கம் என்னும் திருப்பதியை அடைந்தனர். அங்கு அவர்கள் ஒரு சோலையிலிருக்கும் போது, அறமுரைக்கும் அருகசாரணர் இருவர் வந்து தோன்றினர்; அவர்களைக் கவுந்தி முதலியமூவரும் அடிவணங்கினர்; சாரணர் அவர்களுக்கு அறமுரைப்பக்கேட்டு, கவுந்தி அவர்களது அருண் மொழியைப் போற்றி, அருகதேவனைத் துதித்தாள். பின்பு சாரணர் செல்ல, மூவரும் ஒடமேறிக் காவிரியின் தென்கரையையடைந்து, ஒரு சோலையில் தங்கியிருந்தனர்; அப்பொழுது அங்கு வந்த வம்பப்பரத்தை ஒருத்தியும், வறுமொழியாடும் துார்த்தன் ஒருவனும் கவுந்தியை அணுகி, "மதனும் இரதியும் போல்வார் இவர்கள் யாவர்?" எனக் கோவலனையும் கண்ணகியையும் குறித்து வினவினர். அதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/24&oldid=1410951" இலிருந்து மீள்விக்கப்பட்டது