பக்கம்:கண்ணகி தேவி.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

31


அவ்வாறு கூறுங்கால் இடையர் குலத்திற் பிறந்தவளாகிய மாதகி என்னும் முதுமகள் ஆரியாங்கனை என்னும் தெய்வத்துக்குப் பாற்சோறுகொண்டுபோய் நிவேதித்து வழிபட்டு வருகின்றவள், கவுந்தியைக் கண்டு வந்து வணங்கினாள். அது கண்ட கவுந்தி, 'புனிதமான பசுவினங்களைக் காத்து, அவற்றின் பால் முதலிய பயனை யாவர்க்கும் அளித்து உபகரிக்கும் தருமகுணமுடைய இடையரது இல்வாழ்க்கையில் கொடுமை சிறிதுமில்லை; அஃதன்றியும், இம்மாதரி அழுக்காறு பொய்ம்மை முதலிய தீயகுணங்கள் இல்லாதவள்; அருள் மிகுந்தவள்; மேலும் வயது முதிர்ந்தவள்; இற்றைக்கு இந்த இடைக்குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தால் யாதொரு தீங்கும் அடையாது,' என்றெண்ணி, மாதரியை நோக்கிக் கூறுவாள் :

"இம்மங்கையின் கணவனது தந்தை பெயரைக் கேட்டால், இந்நகரத்து வணிகர், பெறுதற்கரிய பொருளைப் பெற்றதுபோல மகிழ்ந்து, நல்விருந்தாய் எதிர்கொண்டழைத்துத் தம் மனையில் வைத்துக் கொள்வர்; அவ்வண்ணம் அவர்கள் இவர்களை அழைத்துக்கொள்ளும் வரை, இம்மங்கையர்க்கரசியை உன்னிடம் அடைக்கலமாகத் தருகின்றேன். நீ இவளை நீராட்டி அலங்கரித்துத் தோழிகளும் செவிலித்தாயும் நற்றாயும் நீயேயாயிருந்து, இவளைத் தாங்குவாயாக ; இதற்குமுன் இவள் பாதம் பூமியைக் கண்டறியாது; பாவம் தன் கால்கள் வெயிலின் வெம்மையால் கொப்புளங்கொண்டிருக்கவும், அதற்கு வருந்தாது, தன் கணவன் வெயிலின் கொடுமையால் மெய்வருந்தியதற்கே மிகுந்த துயருற்று, நாவும் புலரும்படி வாடி, கணவன் துயரன்றித் தன் துயரென்று வேறு காணாத பத்தினி தேவி இவள் ;