பக்கம்:கண்ணகி தேவி.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கண்ணகி தேவி

'இன் றுணை மகளிர்க்(கு) இன்றி யமையாக்
கற்புக்கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால் ;
வானம் பொய்யாது; வளம்பிழைப் பறியாது ;
நீணில வேந்தன் கொற்றஞ் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த காடு.'

என்று பத்தினிப் பெண்டிர்களைப்பற்றிச் சொல்லும் நல்லோரது அறநூல் நீதி நீயறிந்ததன்றோ? தவசிகள் கொடுத்த அடைக்கலப் பொருள், அப்போது சிறிதாயினும், பின்பு மிக்க பேரின்பம் தரும். இதனை ஒரு வரலாற்றால் விளக்குகின்றேன் ; கேள் :

“காவிரிப்பூம்பட்டினத்தில் முன்பு ஒருநாள் பிண்டி மர நிழலிலிட்ட சிலாதலத்தில் சாரணர் ஒருவர் அமர்ந்து சாவகர் (அருகரில் இல்லறத்தார்) சூழ்ந்து கேட்கத் தருமோபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது, பூமாலையும் பொன்னாபரணமும் அணிந்து அழகு மிகுந்த தோற்றத்தோடு, தேவன் ஒருவன் அங்கு வந்து தோன்றினான். அங்கிருந்து தருமம் கேட்டவர்கள், அவனது அழகிய தெய்வ வடிவத்தில் ஒரு கை குரங்கின் கையாய் இருப்பதைக் கண்டு வியப்புற்று, 'இவன் யார்? வரலாறென்ன ?’ எனச் சாரணரைக் கேட்டனர். அதற்குச் சாரணர், சபையோரே, கேளுங்கள்: எட்டிப் பட்டம்பெற்ற பெருஞ்செல்வனான சாயலன் என்னும் வணிகன் ஒருவன் இந்நகரில் இருந்தனன். அவன் அகத்துக்கு ஒரு நாள் உண்டியருந்த வந்த ஒரு முனிவரை, வணிகன் மனைவி எதிர்சென்று உபசரித்தழைத்து வந்து உண்பித்தாள். அப்போது ஊரில் துரத்தப்பட்டு உணவு பெருது வருந்தி வந்த ஒரு குரங்கு, சாயலன் மனையிற்புகுந்து,