பக்கம்:கண்ணகி தேவி.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கண்ணகி தேவி

இரங்கிக் கூறினாள். செய்தி அறிந்து வந்த ஆய்ச்சி, “அந்தப்புரத்திலிருந்த சிலம்பை அபகரித்த கள்வன் கோவலனே என்று அவனைக் காவலர் கொலை செய்து விட்டனராம்!” என்றனள். அந்தோ! அப்போது கண்ணகியடைந்த துன்பத்தை எண்ணவும்படுமோ! துயரம் பொங்கி எழுந்தாள் ; கூந்தல் தாழ வீழ்ந்தாள் ; தன் வசமிழந்தாள் ; கண்கள் கலங்கிச் சிவக்கும்படி கையால் முகத்தில் அறைந்தழுதாள் ; கொழுநனை விளித்து, "அந்தோ ! நீர் எங்கிருக்கின்றீர்!" என்று பொருமிப் புலம்பினாள். இங்ஙனம் பலவாறு துயருழந்த கண்ணகி, பின்னர்க் குரவையாடின மகளிரை நோக்கி, "ஆயர் மகளிரே, நீங்கள் எல்லாம் கேளுங்கள்," என்று சொல்லிப் பின் சூரியனை நோக்கி, "செங்கதிர்ச் செல்வனே, இவ்வுலகிலுள்ள பொருள்களுள் நீ அறியாத பொருள் ஒன்றும் இல்லை; ஆதலால், நீ அறிய என் கணவர் கள்வரோ?" என்றாள். அப்போது சூரியன், அசரீரியாய், "நின் கணவனோ கள்வனல்லன்! அவனைக் கள்வன் என்ற இவ்வூரைமாதே, விரைவில் எரியுண்ணும்," என்றான்.

கண்ணகி மற்றைச் சிலம்பொன்றைக் கையிலேந்திக்கொண்டு, அந்த ஆயர்பாடியினின்றும் அந்த நகருள்ளே சென்று, அங்குள்ள கற்புடை மகளிரை தோக்கி, "நீதியில்லாத அரசனிருக்கின்ற ஊரிலிருந்து வாழும் பத்தினிகளே, என் கணவர் கொண்டுவந்த சிலம்புக்கு இணையான மற்றைச் சிலம்பு இதோ என் கையிலிருக்கின்றது ; உலகில் பிறந்தார் ஒருவரும் படாத துன்பம் யான் பட்டேன் ; ஒருவரும் உறாத துயரம் யான் உற்றேன்; என் கணவர் கள்வனல்லர் ; என் காற்சிலம்பு மிக்க விலை பெறுவதாதலால், அதனை அபகரித்துக் கொள்ளக் கருதி, அவரைக் கள்வனென்று பெயரிட்டுக் கொன்றார்களே ! இஃது என்ன அநியாயம் ! இம்மகளிர்க்கு முன்