பக்கம்:கண்ணகி தேவி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கண்ணகி தேவி

" யாருமில் மருண்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ !
பார்மிகு பழி தூற்றப் பாண்டியன் தவறிழைப்ப
ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ !"

என்று பலவாறு அரற்றி அழுது, "இந்நகரத்தில் என்னைப் போல் பெண்பிறந்தார் இல்லையோ! சான்றார்கள் இல்லையோ ! தெய்வமில்லையோ! இவர்களிருப்பின் இவ்வநியாயம் பிறக்குமா!' என்று இன்னன சொல்லி அழுது, கணவனைத் தழுவிக்கொண்டாள். அவ்வளவிலே கோவலன் எழுந்து நின்று, "அந்தோ! உனது மதிபோலும் முகம் கன்றியதே!" என்று சொல்லிக் கையால் அவள் கண்ணீரைத் துடைத்தான். பின்னர்க் கண்ணகி, விம்மி அழுது வீழ்ந்து, கணவனுடைய அடிகளைக் கையாற் பற்றிக்கொண்டாள். சுவர்க்கம் புகுவதற்கெழுந்த கோவலன், “கண்ணகி, நீ இருக்க,” என்று சொல்லி, தேவர் குழாம் சூழ வானிற்போனான்.

கண்ணகி, "இங்ஙணம் என் கணவர் எழுந்து நின்றது மாயமோதான் ! அன்றாயின், வேறு யாதாகும் இது! ஒரு வேளை என் மனத்தை மருட்டிய தெய்வமோ! தெரிகின்றிலேன்! ஆதலால், என் கணவரை எங்கும் போய் ஆராய்ந்து கூடுவேன்! அங்ஙனம் கூடுதலும் என் சினந் தணிந்தாலன்றிக் கூடேன்; என் சினம் தணிதற்பொருட்டு யான்சென்று அக்கொடிய வேந்தனைக்கண்டு, என் கணவரைக்கொன்ற இத்தீச் செய்கை யாதென்று கேட்பேன்," என்று தன் நெஞ்சோடு கூறினாள். அப்போது தன்னுாரில் முன்புகண்ட தீக்கனா ஞாபகத்திற்கு வந்தது. அதனால், கண்ணீர் சோர நின்று, பின்பு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அரண்மனை வாயிலை நோக்கிச் சென்றாள்.