பக்கம்:கண்ணகி தேவி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கண்ணகி தேவி

உனக்குப் பிழை செய்த நாளில் இம்மதுரையம்பதியை எரித்து விடும்படி முன்னரே ஒரு கட்டளை பெற்றுள்ளேன் ; இப்பொழுது யாரை அழித்தல் வேண்டும்?" என்று கேட்டான். அதற்குக் கண்ணகி, "அந்தணர், அறவோர், பசுக்கள், பத்தினிகள், மூத்தோர், குழந்தைகள் என்னுமிவரைக் கைவிட்டுத் தீயோர் பக்கமே சேர்க," என்று ஏவினாள். அப்பொழுதே மதுரைநகர் தீ மண்டி எரிவதாயிற்று. உடனே அந்நரைக் காக்கும் வருணபூதங்கள் நான்கும் பெயர்ந்து போயின. கடைவீதிகளும் இரத வீதிகளும் நால்வகை வருணத்தார் வீதிகளும் கலக்கமுற்றன. தருமமுடையோர் இடம், அழல் சேர்தலின்றிப் பாவிகள் வீடுகளில் அக்கினி பற்றி எரிந்தது. நெருப்பு நெருங்குதலாலே பசுக்களும், கன்றுகளும் அறநெறி தவறாதவர்களாகிய ஆயர் வீதிகளையடைந்தன. நித்திரை செய்துகொண்டிருந்த பெண்டிரும், ஆடவரும் பிழைக்குமிடந்தேடி அலங்கோலமாய் ஓடினர். மாதர்கள் பிள்ளைகளை எழுப்பிக்கொண்டு மாமிக்கிழவிகளோடு வெருவி ஓடினர். கற்புடைய பெண்கள் பலர் "கணவனையிழந்த இக்கற்புடையாள் சிலம்பால் அரசனோடு வெல்வழக்காடிப் பூசல் விளைத்து நியாயமே" என்று கூறி, அக்கினியைத் தொழுதனர். நகரமுற்றும் நடைபெறும் விழாக்கள் நடவாமல் ஒழிந்தன. வேத ஓசை அடங்கியது, வேள்வி இயற்றலும், தெய்வபூசனை செய்தலும் இல்லாது போயின. வீடுகளில் விளக்கேற்றல் முதலிய மங்கல காரியங்களும், அரண்மனைகளில் முரசு முழங்குதலும் அறவே ஒழிந்தன.

இவ்வாறு பாழ்பட்ட நகரத்தில் கண்ணகி, காதலனுக்குற்ற துன்பத்தால் உள்ளங்கனன்று, கொல்லன் உலைக்களத் துருத்திபோல் பெருமூச்செறிந்து, வீதி தோறும் சுழன்று சுழன்று திரிவாள் ; கவலையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/58&oldid=1412203" இலிருந்து மீள்விக்கப்பட்டது