பக்கம்:கண்ணகி தேவி.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கண்ணகி தேவி

என்னும் கூத்தினைக் கண்டு களித்தான். பின்னர்ச் செங்குட்டுவன் தேவியுடன் நிலாமுற்றத்தை விட்டுப் புறப்பட்டுப் பேரோலக்க மண்டபத்தையடைந்து, அரியணையில் வீற்றிருந்தான். அப்போது, கனகவிசயரைக் கல்லேற்றி அழைத்துச் சென்ற நீலன் முதலியோர்கள், அரசன் அவையில் வந்து வணங்கி, "அரசே, கட்டளைப்படியே நாங்கள் சோழர் தலைநகர் சென்று, அங்குச் செம்பியர் பெருமானைக்கண்டு ஆரிய மன்னர்களைக் காட்டி வணங்கினோம், அவர்களைக் கண்ட சோழன், 'போரிற் பேராண்மையுடன் பொருது அஞ்சியோடிய வேந்தரைப் பிடித்து வருதல் ஒரு வெற்றியாகாது,' என்று கூறினன். பின்னர், வேந்தே, மதுரை சென்று பாண்டியனைக்கண்டோம், பாண்டியன், 'தப்பியோடிய மன்னர்மேல் இவ்வாறு சீற்றங்கொண்ட அரசனது வெற்றி இதுவரை யாம் காணாத புதுமையாகும்,' என்றான்,” என்று சொல்லிகின்றனர். இவ்வாறு தன் வெற்றியைச் சோழபாண்டியர் இகழ்ந்தனர் என்ற அளவில் செங்குட்டுவன் கோபம் பெருகிக் கண்கள் சிவந்து வெகுளி நகை செய்தனன். இங்ஙனம் அரசனுக்குச் சீற்றம் பெருகுதலைக்கண்ட மாடலமறையோன் சபையில் எழுந்து, "வெற்றி வேந்தே, கோபந்தணிக பகைவர்களை வென்று நீ அடைந்த வெற்றிபோல் வெற்றிபெற்றார் அரசருள் எவருளர்; உன் வாழ்நாள் பல்குக ! நான் சொல்லும் சொற்களை இகழாது ஏற்றருள வேண்டும். உனக்கு ஐம்பது யாண்டு கழிந்தும் நீ அறக்கள வேள்வி செய்யாது எப்போதும் மறக்களவேள்வியே செய்து வருகின்றாய். உலகத்தில், இளமை, யாக்கை, செல்வம் எல்லாம் நிலையாவென்பதனை நீ நன்கறிவாய். உயிர்கள் தாம் செய்யும் நற்கருமங்களுக்கேற்ப உயர் கதியடையும். அத்தகைய யாக கருமங்களை இனி நீ செய்தல் வேண்டும்; ஆதலால், யாகபத்தினியாகிய