பக்கம்:கண்ணகி தேவி.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

69

உன் தேவியுடன் இராசசூய வேள்வியை உடனே தொடங்குவாயாக," என்று செங்குட்டுவன் மேலும் போர் தொடங்காது கோபம் தணியுமாறு உபதேசித்தனன்.

மாடலன் உபதேசம் பெற்ற அரசன், அவ்வாறே இராசசூய வேள்வி செய்யக்கருதி, அதற்கு வேண்டியனவெல்லாம் சித்தஞ் செய்து, வேள்வியை வேதம் வல்லாரைக்கொண்டு தொடங்கக்கட்டளை யிட்டான்.

இவ்வாறு கட்டளையிட்ட பின், உலகமெல்லாம் தொழும் பத்தினியாகத் தான் (கண்ணகி) விளங்குகின்றமையால்,'மடவார் கற்பு அரசர் முறைசெயினல்லது சிறவாது,' என்னும் ஆன்றோர் நீதியைச் (தன் கணவனை நல்வழிப்படுத்தாத) சோழனைக்கொண்டுவிளக்கியும் செங்கோல் வளையின் அரசர் உயிர் வாழார் என்பதனப் பாண்டியனைக்கொண்டு விளக்கியும், தாம் செய்த சபதம் முடிந்தாலல்லது கடுஞ்சினங் தணியார் அரசர் என்பதனைச் சேரனக்கொண்டு விளக்கியும், மதுரைமாநகரம் எரிந்தழியுமாறு அழலைத் தன் சாப மொழியால் விளைவித்து, அருஞ்செயல் பல புரிந்து, சேரநாடடைந்து வேங்கைமர நிழலில் நின்றபத்தினி தேவியின் பொருட்டு அழகுபெறச் சமைத்த கோயிலுக்குச் செங்குட்டுவன், அந்தணர், அறிவர், புரோகிதன், நிமித்திகர் தலைவன் இவர்களுடன் சென்று, இமயத்தினின்றும் கொணர்ந்த சிலையில் சிற்பமுறையில் செய்து முற்றுவிக்கப்பெற்ற பத்தினிப் படிமத்தில் மங்கல அணிகள் பூட்டி அலங்கரித்துப் பூப்பலியாகிய அருச்சனைகள் புரிந்து, திக்குத் தேவதைகளைக் கடை வாயிலில் நிறுவி, ஆகம முறைப்படி பத்தினித் தெய்வத்தைப் பிரதிட்டை பண்ணுவித்துப் பெருமகிழ்ச்சி உற்றான்.

இஃது இங்ஙனமாக, கோவலன் கொலையுண்டிறந்தமையைக் கேட்டு, காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து கண்ணகியின் செவிலித்தாயும் அடித்தோழி