உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகி தேவி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கண்ணகி தேவி

தேவந்தியும் கண்ணகியைத் தேடிக் காணுதற்குப் புறப்பட்டு மதுரை வந்தனர் ; மதுரை எரிபட்டிருப்பதைக் கண்டு மாதரி வீட்டுக்குள் சென்றனர். மாதரி அடைக்கலப்பொருளாகிய கோவலனை இழந்ததனால் துன்புற்றுத் தீயிற்பாய்ந்து இறந்து போனமையால், அவள் மகள் ஐயையைக் கண்டு, நடந்த வற்றை யெல்லாம் கேட்டுத் தெரிந்தனர். பின் அவர்கள் ஐயையோடும் புறப்பட்டு வைகைக் கரை வழியாகச் சென்று, செங்குன்று என்னும் கண்ணகி எறிய மலையில் ஏறிப் பின்னர்ப் பத்தினிக் கோயிலை அடைந்தார்கள். அடைந்தவர்கள், அங்கிருந்த செங்குட்டுவனிடம் தாங்கள் 'இன்னார்' என்று தங்கள் வரலாற்றைத் தெரிவித்துக் கண்ணகி தேவியைத் தரிசித்துப் பலவாறு அரற்றிப் புலம்பினர், அதனை அவன் கேட்டுக் கொண்டிருக்கையில், கண்ணகி செங்குட்டுவனுக்கு மின்னற்கொடிபோலப் பளிச்சென்று மின்னி, தெய்வ வடிவத்தோடு காட்சி தந்தருளினாள். இதனைக் கண்ட செங்குட்டுவன் மிகுந்த ஆச்சரியமுற்றான். அப்போது தெய்வமாகிய கண்ணகி, "பாண்டியன் தீதில்லாதவன். அவன் இந்திரன் அரண்மனையில் நல் விருந்தாய் விளங்குகின்றான்; நான் இத தெய்வ உடம்பைப் பெறுவதற்கு அவனே காரணமானவனாதலால், நான் அவன் மகள்," என்றாள். உடனே வஞ்சி நகரத்துப் பெண்களெல்லாம் கண்ணகியைத் துதித்து பாடி, மூவேந்தரையும் வாழ்த்தினர். கண்ணகி தேவியும், "செங்குட்டுவன். நீடூழி வாழ்க!" என்று வாழத்தினள்.

கண்ணகியின் கடவுட்கோலத்தைத் தரிசித்து நின்ற செங்குட்டுவன், தேவந்தி என்னும் பார்ப்பனியை நோக்கிச் "சிறிது முன்பு நீங்கள் அழுது புலம்பிக் கொண்டு, பத்தினியின் சந்நிதானததில் கூறிய மணிமேகலை, என்பவள் யார்? அவன் துறவு பூண்டதற்குக் காரணமென்ன?" என்று கேட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/78&oldid=1410915" இலிருந்து மீள்விக்கப்பட்டது