பக்கம்:கண்ணகி தேவி.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

71

டனன். அதற்குத் தேவந்தி, கோவலனுக்கு நாடகக் கணிகை மாதவி வயிற்றிற்பிறந்த மணிமேகலையின் சரிதத்தைக் கூறத் தொடங்கி, அவன் பிறந்ததும் வளர்த்ததும், கோவலன் கொலையுண்டது தெரிந்து, மாதவி புத்தசமயத்தில் புகுந்து பிக்ஷுணியாகி, மணிமேகலையையும் பௌத்த தர்மத்தில் சேர்த்ததுமாகிய செய்திகளை விரித்துக் கூறி நின்றாள்.

நின்ற தேவந்திமேல் பாசண்டச்சாத்தன் என்னும் தெய்வம் திடுக்கென்று ஆவேசமுற்றான் ; அதனால். அவள் கூந்தல் குலைந்து பின்னே தொங்கவும், புருவம் துடிக்கவும், செவ்வாயில் சிரிப்புத் தோன்றவும், மொழி தடுமாறி முகம் வெயர்க்கவும், செங்கண் சிவக்கவும், கையோடு கையைப் புடைத்துக் காலைத் துாக்கி வைத்து ஆடினாள். அங்ஙனம் அவள் மீதுற்றி பாசண்டச்சாத்தன், அரசனோடு நின்ற மாடலன் என்னும் மறையவனை நோக்கி, "நான் பாசண்டச்சாத்தன் ; இத்தேவந்திமேல் ஆவேசித்திருக்கிறேன்; பக்தினிதேவியாகிய கண்ணகியின் மங்கலப் பிரதிஷ்டையைக் காணுவதற்கு இங்கு வந்துள்ள பெண்களுள் அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களும், திருமால் கோயில் அருச்சகன் மகளும் இருக்கின்றார்கள். நான் முன் உன்னிடம் கொடுத்துள்ள மங்கலாதேவி கோயில் மலைச் சுனைத்தீர்த்தத்தை இந்த மூன்று பெண்களின் மீதும் தெளிப்பாயாக அந்தத் தீர்த்தம், தன்னில் மூழ்குவோர்க்குப் பழம் பிறப்பை அறிவிக்க வல்லது. இவர்கள் மீது தெளிப்பாயாயின் இவர்கள் தங்கள் முற்பிறவியை அறிவார்கள்," என்றான்.

இவ்விதம் தேவந்தி ஆவேசமுற்றுக் கூறியவைகளைக் கேட்டுச் செங்குட்டுவன் ஆச்சரியமுற்று, மாடலனை நோக்கினன். மாடலன், “அரசே, கேள் : முன்-