பக்கம்:கண்ணகி தேவி.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கண்ணகி தேவி

னொரு நாள் மாலதி என்னும் பார்ப்பனமாது தன் மாற்றாள் பிள்ளையை எடுத்துப் பால் கொடுக்கையில் அக்குழந்தை விதி வசத்தால் பால் விக்கி இறந்து போயிற்று. அதனால் அவள் தன் மாற்றாளும், கணவனும் தன்னைப் பழிப்பார்களே என்று பயந்து வருந்திப் பாசண்டச்சாத்தன் கோயிலில் சென்று வரங்கிடந்தாள். அவளது துயரத்துக்கிரங்கி அச்சாத்தன் அக்குழந்தை உருக்கொண்டு வந்து, 'அன்னாய், நான் வந்தேன்; உன் துயரை ஒழி, என்று கூறிற்று. அவள் அக்குழந்தையை மாற்றாள் கையில் மகிழ்ச்சியுடன் கொண்டுபோய்க்கொடுத்தாள். பின் அவன் வளர்ந்து காளைப்பருவம் வந்ததும் இப்போது இங்கு ஆவேசித்தாடுகின்ற இத்தேவங்கியை மணஞ்செய்து, எட்டாண்டு இவளுடன் வாழ்ந்து வந்தான். இவ்வாண்டுகள் கழிந்ததும் அவன் இவளுக்குத் தன் வரலாற்று உண்மையைக் கூறித் தினந்தோறும் இவளைத் தன் கோயிலுக்கு வரும்படி சொல்லிவிட்டுப் பிறர்க்குத் தான் தீர்த்தமாடச் செல்பவன் போலக் காட்டித்தன் கோயிலுக்குப் போய்விட்டான். பின்பு இவள் அவன் கோயிலுக்குத் தினந்தோறும் சென்று வழிபட்டு வந்தாள். நான் ஒரு சமயம் மங்கலாதேவியின் கோயிலுக்குச் சென்றிருந்தபோது அச்சாத்தன் ஓர் அந்தணன் வடிவுடன் வந்த, உறியிலிருக்கும் இக்கரகத்தைக் கொடுத்துப் போயினான்; போனவன் மீண்டும் வாராததனால், அதனைக் கொண்டு வந்துவிட்டேன். இப்போது அச்சாத்தன் என்னும் தெய்வமே இவள் மீது ஆவேசித்து, இக்கமண்டல நீரைத் தெளிக்கும்படி கூறுகின்றான். அரசே, அப்படியே இப்பெண்கள் மீது இதன் நீரைத் தெளித்துப் பார்க்கலாம்," என்று சொல்லி அந்நீரை அப்பெண்கள் மூவர் மேலும் தெளித்தான். உடனே அச்சிறுமிகட்குத் தங்கள் பழம் பிறப்புணர்ச்சி உண்டாயிற்று. அம்மூவரும் தனித் தனி புலம்பலானார்கள்.