பக்கம்:கண்ணன் கருணை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்னுரை

ஆதிசங்கரர் காலத்தில் நாம் இல்லை. இன்றைய காஞ்சி சங்கரரைக் கண்டு கொண்டிருக்கிறோம். இருபது ஆண்கடுளுக்கு முன் ஒரு சமயம் சென்னையை அடுத்த வானகரத்தில் நம் முனிவர் பெருமான் முகாமிட்டிருந்தார்கள். நானும் ஒரு நாள் வழிபடச் சென்றிருந்தேன். வடபழநி ஆண்டவர் கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதைத் தெரிவித்துக் கொண்டேன். பளிச்சென்று "நீ தமிழ்ப் பணி செய்” என்றார்கள். அற நிலைய வாரியத்துக்கு ஒப்புதல் முறிச்சீட்டு எழுதிக் கொடுத்திருப்பதைச் சொன்னேன். பெரிய தூண்களுக்கும் வலிய உத்திரங்களுக்குமான பெரும் பாறைகள் பட்டி மலைக் குப்பத்திலிருந்து வந்து சேர்ந்து விட்டதையும் சொன்னேன். புன்முறுவல் பூத்தார்கள். "முருகன் முடித்துக் கொள்வான்" என்றார்கள். தமிழைப் பற்றியே பேசினார்கள். தமிழோடு என்னை வளர்த்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றி விசாரித்தார்கள். அருட் பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள். ஆண்டுகள் பத்து ஆனபின்னும் ஆரம்ப வேகத்தில் செதுக்கப்பட்ட சில தூண்களோடு திருப்பணி முடங்கிக்கிடந்தது. என் இயலாமையை எழுத்தில் கொடுத்த பின்னரே முருகனுக்கு முன் மண்டபம், கோபுரம் என திருப்பணி சிறப்புற்றது. பின்னும் பத்தாண்டுகள் ஆன பின்னரே நான் தமிழ்ப் பணிக்கு வந்திருக்கிறேன். கீதையின் திரண்ட பொருளுக்கு ஒரு எளிய தெளிவுரையாக, கண்ணன் சொன்னதும் என்னைச் சொல்ல வைத்ததுமே-இந்த கண்ணன் கருணை.


அன்பன்,
ஏகேவேலன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/5&oldid=1241467" இலிருந்து மீள்விக்கப்பட்டது