பக்கம்:கண்ணன் கருணை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


வாழ்வது யாரோ ஆளுவது யாரையோ
கேள்விகள் ஆயிரம் கிளர்ந்து எழுந்தன
உள்ளம் சோர்ந்தான் உடலும் தளர்ந்தான்
விழிகள் வெளுத்தன வேதனை பொங்கிற்று
கையிருந்த காண்டீபம் நழுவிற்று காண்.
விஜயன் நிலை குலைந்தான் தேர்தட்டில் அமர்ந்தான்

அச்சமோ அர்ச்சுனனுக்கு என்றால் இல்லை.
இச்சைகளை எல்லாம் ஈடேற்றி வைத்த
அச்சுதன் இருக்கும் போது ஆகாததென்ன
வீரம் பெரிதென்று வெஞ்சமருக்கு வந்தபின்னே
ஈரம் சுரந்து விட்டது இதயத்திலே
நாரணனுக்கு முன்னே ஒரு நரனாக நின்றான்
நல்லதும் கெட்டதும் இல்லாத ஒருவன்
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன்
எங்குமாய் யாவுமாய் இருக்கின்ற தேவன்
விதிக்கு விதி எழுதும் வித்தகன்
சரண்என்ற பேர்க்குத் தான் என்று முன் நிற்பவன்
இறைமகன் கண்ணன் இள நகை புரிந்தான்.


கண்ணன்


பார்த்தனே கேளடா பகைக்கும் பழிக்கும்
அப்பால் நிற்கும் நின் தெய்வம் நானடா
விளக்காக நீ எரிந்தால் அதன் வெளிச்சம் நானாவேன்
நீ வாளைச் சுழற்றினால் அதன் வீச்சாக நானிருப்பேன்

வெற்றியும் தோல்வியும் வீரனே உனக்கில்லை.
எதிரிகள் உன்னைக் கொன்றால் சொர்க்கம்
எதிரிகளை நீவென்றால் ராஜபோகம் உண்டு.
ஆக்கலும் காத்தலும் அழித்தலும் என் பணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/9&oldid=1241484" இலிருந்து மீள்விக்கப்பட்டது