பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 ராசீ ___________________________________________ அவைக்குள் நுழைந்தனர். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதைச் சராசந்தனால் அறிந்துகொள்ள முடிந்தது; அவர்கள் தோளில் இருந்த தழும்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.

"நீவிர் யாவிர்?" என்று கேட்டான். கண்ணன், வீமன், அர்ச்சுனன் என்பதை அவர்கள் அறிவித்தனர்.

"எதற்காக வந்தீர்கள்?" என்று கேட்டான். "உன்னோடு மற்போர் செய்ய" என்றனர். "மற்போர் எதற்காக" என்றான். "சேனைகள் மடிவதைத் தடுக்க" என்றான் கண்ணன். களம் குறித்துப் போர் செய்ய உள்ளம் கொண்டான்.

"நீ எனக்கு அஞ்சித் துவாரகைக்கு ஒடி ஒளிந்து கொண்டாய்; அருச்சுனன் இளையவன்; வீமன்தான் எனக்கு நிகராவான்" என்று உரைத்தான்.

களம் அமைத்து மற்போர் தொடங்கினர்; வீமன் களம் கண்ட வீரன்; இடும்பனை இடியெனத் தாக்கியவன்; கீசகனைப் பிளந்தவன்; பகனைக் கொன்றவன். இப்பொழுது அவனுக்குக் கிடைத்தது சராசந்தன். இருவரும் வலிமையில் நிகரானவராய் இருந்தனர்.

கதாயுதம் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்; அதுவே வீமனுக்குக் கைவந்த கருவி. காலையில் தொடங்கி மாலைவரை பொருதனர்; சத்தம் வந்ததேயன்றி அவன் சரித்திரத்தை முடிக்க இயலவில்லை; இருபத்து ஏழு நாள்கள் சென்றன. அவனை இரு கூறு படுத்தினாலும் அவை ஒன்று சேர்ந்துவிட்டன.