பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇115



அனுப்பிவிட்டுச் சாலுவனைத் தேடிக் கண்ணன் சென்ற போது அவனை வளைத்துக்கொண்டான். இருவருக்கும் விற்போர் நிகழ்ந்தது. அவன் ஒருசூழ்ச்சி செய்தான். இராவணன் மாயாசனகனைக் கொண்டு சீதையை மருட்டியது போலக் கண்ணனின் தந்தையாகிய வசுதேவரின் தோற்றத்தை ஒருவன்முன் நிறுத்திக் காட்டி அவனை வெட்டச் செய்தான். கண்ணன் சற்று அயர்ந்து விட்டான்; என்றாலும், இது மாயையாகத்தான் இருக்க வேண்டும். என்று உறுதியாய் இருந்தான். பலராமன் அங்கு இருக்கும்வரை இவன் ஆள்கள் உள்நுழைய முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை இருந்தது. பின் தொடர்ந்த போரில் தன் சக்கராயுதம்கொண்டு அவன் சிரத்தைக் கொய்து கொன்றான்.

அவன் இறப்பினைப் பழிதீர்க்க அவன் நண்பனான தந்தவக்கிரன் என்பவன் படைகள் எதுவும் இன்றித் தனித்துப் போர் செய்ய வந்தான்; கையில் கதாயுதம் வைத்திருந்தான். கண்ணனும் தன் கையில் இருந்த கவுமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தால் அவன் கதையை முடித்தான். அவனைத் தொடர்ந்து அவனுடைய தம்பி விதூரதன் வாள்கொண்டு வர, அவனைத் தன் சுதர்சனம் என்னும் சக்கரத்தால் சிரத்தை அறுத்து முடித்தான்.

குசேலரின் நட்பும் பெட்பும்

துவாரகையில் உள்நாட்டுப் பூசல்களும் எதிரிகளும் தாக்குதல்களும் இன்றி அமைதியாக இருந்த நாள்களில் கண்ணனைத் தேடிக்கொண்டு அவன் ஒருசாலை மாணவராய் இருந்த குசேலர் வருகைதந்தார்.