பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇121



எடுத்துக்கொண்டு தாக்கிக் கொண்டனர். உலக்கை ஒன்று துகளாகி அது கோரைப்புல்லாக வளர்ந்துவிட்டது. அதன் பின்னணியில் ஒருநிகழ்ச்சி இருக்கிறது. விசுவாமித்திரர், கண்ணுவ முனிவர், நாரதர் இம்மகா முனிவர்களை யாதவ இளைஞர் சந்தித்தனர். பிண்டாரகம் என்னும் நதியின் கரையில் அவர்கள் இருந்தனர்; கர்வம் பிடித்த இந்த யாதவ இளைஞர்கள் சாம்பவதியின் மகனான சாம்பனைப் பெண் பிள்ளையைப்போல் அலங்கரித்து அம் முனிவர்களின் முன்நிறுத்தி, "இப் பெண்பிள்ளை பிள்ளைதாய்ச்சி, இவள் பெறப்போவது பெண்ணா? பையனா?” என்று கேட்டனர் அவர்களுக்குக் கோபம் வந்து விட்டது. "உலக்கை" என்றனர். அவர்கள் இட்ட சாபப்படி அவனுக்கு ஒர் உலக்கை பிறந்துவிட்டது; இரும்பு உலக்கை; அதனை உக்கிரசேனன் பொடியாக்கிக் கடற்கரையில் போட அப்பொடி கோரைகளாய் முளைத்தன. அதன் மிகுதித் துண்டு ஒன்று அம்பின் முள்ளைப் போன்று இருந்தது. அதையும் கடலில் தூக்கி எறிய, அதனை ஒருமீன் விழுங்கிவிட்டது. அதனைச் செம்படவர் அரிந்தபோது அதன் வயிற்றில் இருந்த அவ் இரும்பு முள்ளை எடுத்துப் போட அவ்வழி வந்த வேடன் ஒருவன் தன் அம்பில் செருகிக் கொண்டான். இந்த அம்பு மிகக் கூரியது. இந்தக் கோரைப் புல்களைப் பிடுங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சர்வ நாசம் அடைந்தனர். பலராமனும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து யோக நெறியில் நின்று தம் தேகத்தைவிட்டு விட்டுத் தன் பழைய நிலையை அடைந்தான். கண்ணனும் தாருகன் என்ற அவனுடைய தேர் ஒட்டியும் மட்டும் எஞ்சினர்.