பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16◇ ராசீ



என்ற எண்ணம் தோன்றவில்லை; தோற்றம் அளித்தது அவளுக்கு அந்த ஏற்றம்.

அவள் வருவதைக் கண்ணன் கவனியாதது போலக் கண்களை மூடிக்கொண்டான். இவளைப்பார்ப்பதே பாவம் என்று கருதுவது போல அவன் செய்கை இருந்தது.

நஞ்சுகொண்டு அந்நங்கை தன் முலை முனையைத் தடவிக் கொடுத்தாள்; அவள் நெஞ்சு இத்தகையது என்பதை அப் பூச்சில் காட்டினாள்; குழந்தையைப் பால் பருகத் தன் மார்போடு அணைத்தாள். கண்ணன் கைகளால் முலையைப் பற்றி நரம்பு வைத்தியம் செய்தான். அதனால் வரம்பு மீறிக் கத்தினாள். பாலோடு அவள் உயிரையும் பருகி முடித்தான். பால் பருகியது அவள்பால் தனக்கு ஏற்பட்ட நேசத்தால்;உயிர் பருகியது, தன்பால் அவள் காட்டிய மாயத்தால்; அவள் அலறிய குரல் கேட்டு ஆய்ச்சியர் கூடிவிட்டனர்; பேய்ச்சி முலைப்பால் உண்டு அவளைப் பேசாமல் செய்து விட்டதை அறிந்தனர். சத்தம் இல்லாது சவம் ஆகிவிட்டாள்; அவளை அப்புறப்படுத்தித் தகனமும் செய்தனர்.

அவன் ஒன்றும் தெரியாதவன் போல் அவள் மடியில் கிடந்தது அவர்களுக்கு வியப்பைத் தந்தது. நஞ்சு பூசி வந்ததை அந்த ஊர் வைத்தியர் கண்டு சொல்லினார். கோபியர் வந்து அவனை வாரி எடுத்துக்கொண்டனர். சடங்குகள் செய்து சாந்தி செய்தனர்; தெய்வங்களிடம் அவனைக் காக்கும்படிப் பரவி வேண்டினர்; கோயிலில் பூசையும் வழிபாடும் செய்தனர். வாயில் தேடி வந்தவர்க்குத் தான தருமம் செய்தனர்.

நகரத்தில் இருந்து திரும்பி வீடு வந்த நந்தகோபன் நடந்ததைக் கேட்டு அதிர்ந்தான். 'வசுதேவன் வாக்கு வான்மறையாயிற்றே" என்று வியந்தான்; 'உண்மையில் அவர் ஒரு ஞானி'என்று பட்டம் சூட்டிப் பாராட்டினான்.