பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇21



குழந்தையைக் கவனிப்பதில் முழு நாட்டம் செலுத்தும்படி யசோதைக்கு எடுத்துக் கூறினான். "அடுப்புக் கிடக்கட்டும் அவனைக் கவனி" என்று திரும்பத் திரும்பச் சொல்வதில் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்; "உண்டானா உறங்கினானா" என்று வினாத்தாள் தந்தான்; "சட்டை போடு; அசட்டையாக இருக்காதே" என்று சொல்லிக் கொண்டே இருந்தான்; 'பெற்றால் மட்டும் பிள்ளையாகி விடாது; வளர்ப்பதை ஒட்டித்தான் இருக்கிறது" என்று உரைத்தான்.

சகடன் சரிவு

   "கண்ணன் பிறந்து வருஷம் நான்கு ஆயிற்று" என்று பேசின்ர்; பிறந்த நாள் விழாவைச் சிறந்த முறையில் கொண்டாடினர்; ஏழை எளியவர்கள் தம் ஏழ்மை மறக்கும்படி ஏராளமாய் வாரி வழங்கினர்.
  அவனுக்குப் புதிய ஆடை உடுத்தி அழகு சேர்த்தனர். அவன் மல்லாக்காகப் படுத்து இருந்தான். அசுரன் ஒருவனுக்குப் பொல்லாத காலம் அடுத்தது; அடுத்து இருந்த வண்டியை அவன் உருட்டிவிட்டான்; உருண்ட வண்டியைக் கண்ணன் காலால் உதைத்துத் தள்ளினான்; அசுரன் ஒருவன் அதிலிருந்து வெளிவந்து துள்ளினான்; துடித்தான்; மடிந்தான்; குடை கவிழ்ந்தது; அக்குவேறு ஆணி வேறாய்ச் சிதைந்தது; வண்டியின்மீது வைத்திருந்த குடங்கள் உருண்டு அவை பாலைத் தரையில் பாழ் படுத்தின;பாற்குடங்களை அதில் ஏற்றி வைத்திருந்தனர்; தட்டு முட்டுச் சாமான்களும் கெட்டுத் தடுமாறி வீழ்ந்தன. ஒசை கேட்டுப் பூசை செய்து கொண்டிருந்த நந்தன் கோபியர் யசோதை அனைவரும் அங்கு வந்து இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சி உற்றனர்.