பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇27



உயிருக்குத் தக்க காப்பு இல்லை; அத்தகைய சூழ்நிலைகள் உருவாகிவிட்டன என்பதை இவ்வாறு சுருக்கமாக உரைத்தனர். பூதனை, சகடன், சூறாவளி, மருதமரம் இப்படிக் கதைகள் அவர்கள் கற்பனையில் நிறைந்து விட்டன. அதனால் அவர்கள் கூட்டம் கூடிப் பேசினர். அடுத்துச் செய்வது யாது? அபாயங்கள் வந்தால் உபாயம் யாது? என்று கூடிப் பேசினர். நந்தனும் அவன் தம்பி உபநந்தனும் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.

கோகுலத்தை விட்டு அடுத்து இருந்த பிருந்தாவனத்திற்குக் குடி பெயர்தல் என்று முடிவு செய்யப்பட்டது. கோகுலம் வியாகுலங்களை விளைவித்துக் கொண்டிருந்தது. மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்குப் புதிய இடங்கள் தேவைப்பட்டன. கோவர்த்தனம், அதன் மலைச் சாரல், யமுனை நதி, அவற்றைச் சார்ந்த வனங்கள்; காடுகள், மேடுகள் இவை எல்லாம் தக்க இடங்களாகப் பட்டன. செல்லும் சிறுவர்கள் திரும்பி வருவதற்குள் இரவும் வந்து விடுகிறது. அதனால், தொழில் செய்யும் இடத்துக்கே போய்த் தங்குவது எல்லா வகையிலும் நன்மை என்று நல்லது கெட்டது கலந்து பேசினர்.

"கால்கள் முளைத்து விட்டன; கண்ணனை வீட்டில் முடக்கி வைக்க முடியாது; நானும் போவேன் என்று அடம் பிடித்தால் தடங்கல் ஏதும் கூற முடியாது. அந்தி சாயும் நேரமானால் அவன் வந்து சேரவில்லையே” என்று யசோதை தவிப்பாள். அதனால், அங்கேயே கோகுலத்தின் விரிவாகப் பாடி அமைப்பது என்று முடிவு ஆயிற்று.

கோகுலம் தலைமைச் செயலகம் என்றாலும், பிருந்தாவனம் கோடை வாசத் தலம் ஆயிற்று. இங்கும் அங்குமாகவும் சில சமயம் தங்கி மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டனர். புதியன புகுந்தாலும் பழையன கழிக்க வில்லை. இரண்டு இடங்களும் பயன்பட்டன.