பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ◇ ராசீ


கத்திக்கொண்டே செத்தது. அவனைத் தொடர்ந்து பல கழுதை அசுரர்கள் வந்தனர். அவர்களையும் அடித்துக் கொன்றான். அதற்குப் பிறகு அங்கு ஒரு கழுதையும் இல்லை.

பனங்காட்டுக்குச் சென்று பலரும் பழம் பறித்துத் தின்றனர். கண்ணனின் பேருதவியை அனைவரும் பேசிப் பாராட்டினர்.

காளிங்கனை அடக்குதல்

இதனைக் காளிங்க மர்த்தனம் என்றும், காளிங்க நர்த்தனம் என்றும் சொல்வார்கள். கண்ணன் பலராமன் இல்லாமலேயே யமுனை நதிக் கரைக்குச் சென்றான். அங்கு ஒரு நீர் மடு இருந்தது; அதன் அருகில் செல்லவே ஆயர் சிறுவர் அஞ்சினர். கேட்டால் அதன் வாடையே தீய்த்து விடும் என்று உரைத்தனர். அந்தத் தண்ணிரில் யாரும் குளிப்பதும் கிடையாது; நீரைப் பருகுவதும் இல்லை; கன்றுகளும் போவது இல்லை என்று தெரிவித்தனர்.

காரணம் என்ன என்று கேட்டதற்குக் காளிங்கன் என்ற பாம்பு அங்கு இருக்கிறது என்றும், அது கக்கிய விஷத்தால் கரையில் உள்ள மரங்களும், செடி கொடிகளும் பட்டு விட்டன என்றும் கூறினர்.

“இந்த மடுவில் நான் குதித்து நீந்தப் போகிறேன்” என்றான்.

“வேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தனர். இது விஷப் பரீட்சை என்றும் தெரிவித்தனர்.

“தீமையைக் கண்டு அஞ்சக் கூடாது; எதிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் தீமைகளை அகற்ற முடியும்,” என்றான் கண்ணன்.

பக்கத்தில் ஒரு கடப்பமரம் இருந்தது. அங்கு எப்பொழுதாவது கருடன் வந்து உட்காரும்; அது