பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇37


அமுதத்தை அங்குச் சொரிந்ததால் அது மட்டும் உலராமல் இருந்தது. அதன் கிளை ஒன்று அந்த மடுவில் சாய்ந்து அதைத் தொட்டுக்கொண்டு இருந்தது.

மரக்கிளையில் ஏறித் ‘துடும்’ என்று நீரில் பாய்ந்து நீந்தினான். கரையில் இருந்தவர்கள் இன்னது செய்வது என்று தெரியாமல் செயலற்று நின்றனர். சிலர் வீட்டுக்குச் சென்று கண்ணனின் தாயிடமும் தந்தையிடமும் கூறினர். பலராமனுக்கும் செய்தி தெரிந்தது. ஊரே திரண்டு அங்கு வந்து கரையில் நின்று கொண்டார்கள்.

என்ன நடக்குமோ என்று அஞ்சி நின்றனர்.நீரில் இருந்து பல தலைகளுடைய பாம்பு ஒன்று வெளியே வந்தது. கண்ணன் அதனை எதிர்க்கவில்லை. என்ன செய்கிறது. பார்க்கலாம் என்று எதுவும் செய்யாமல் நீரில் தன் போக்கில் விளையாடிக் கொண்டு இருந்தான். பாம்பு வேகமாகச் சென்று தன் வாலைக் கொண்டு அவனை நன்கு பிணித்து விட்டது. இனி அதன் இறுகிய பிடியில் இருந்து தப்ப முடியாது என்று கரையில் இருந்தவர்கள் கதறினர். சில மணி நேரமாக அதன் பிடியில் கண்ணன் இருந்தான்.

யசோதை என்ன ஆகுமோ என்று கதறினாள். தான் நீரில் குதிக்கத் துடித்தாள். இதே போல நந்தரும் வேதனைப்பட்டார். இளைஞர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் அவனைக் காக்க முன் வந்தனர். இன்னும் சிறிது தாமதித்தால் யசோதை உயிர் விட்டு விடுவாள் என்று அதினின்று விடுபடச் செயல்பட்டான்.

கண்ணன் தன் உருவினைப் பெருக்கத் தொடங்கியவுடன் வலி தாங்க முடியாமல் கட்டு அவிழ்ந்தது; அவனைத் தீண்டிச் சாகடிக்க முடியும் என்று வாலினை நீட்டிப் பார்த்தது. அதன் பல் கடிக்கு அகப்படாமல் தலைக்குத் தலை தாவிக் கால்களைப் பெயர்த்து எடுத்தான். இஃது ஒரு நடனமாகவே அமைந்தது.