பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇43


‘கண்ணன் இஃது இந்திரன் செயல்’ என்று அறிந்து கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தான். அதன் நிழலில் கன்றுகளும், பசுக்களும், இடையர் சிறுவர்களும், பெரியோர்களும் புகல் அடைந்தனர்.

கண்ணனின் பேராற்றலைக் கண்டு வியந்த இந்திரன் தரைக்கு வந்து கண்ணனை வணங்கித் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். கண்ணனை அவன் தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான். அதனால், கண்ணனுக்கு உப இந்திரன் என்ற பெயர் வழங்கலாயிற்று, பசுக்களைக் காத்தமையின் கோவிந்தன் என்னும் பெயரும் நிலைத்துவிட்டது. துன்பம் வரும்போது அனைவரும் கோவிந்தன் பெயரைச் சொல்லி அழைப்பதும் வழக்கமாகி விட்டது.

கண்ணனும் கோபியரும் (குழலிசை)

கண்ணன் கன்றுகளை மேயவிட்டுப் பின் அவன் புல்லாங்குழல் ஊதுவது வழக்கம். வேய்ங்குழல் (வேய் மூங்கில்) இசைக்கு உருகாதவர் யாரும் இல்லை; பசுக்களும் கன்றுகளும் மேய்வதை விட்டுச் செவி கொடுத்து மயங்கின. மரங்கள் எல்லாம் அந்த ஒசையால் பசுமையாகத் தழைத்தன. எங்கு இருக்கும் மயில்களும், குயில்களும் அவன் இசை கேட்க வந்து குவிந்தன. கண்ணன் என்றால் அவன் ஊதும் குழல் அவனோடு சேர்த்துப் பேசப் பட்டது.

பொன்னிற ஆடையைக் கண்ணனும், நீலநிற் ஆடையைப் பலராமனும் அணிந்துகொண்டு கண்ணன் குழலூதி வர மேய்ச்சல் வனத்தில் புகுவது கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.

"கண்ணனின் குழல் அவன் வாயிதழ்களின் சுவையை அடைதற்கு என்ன தவம் செய்ததோ என்று கோபியர் வியந்தனர்.