பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇ 49


அவர்களை வரச் சொல்லி அனுப்புவேன்; அவர்கள் அரண்மனை வாயிலில் நுழையும்போது குவலயானந்தம் என்னும் யானையை ஏவி அவர்களைத் தீர்த்துவிடு" என்று கட்டளையிட்டான். அடுத்துச் சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசலன் முதலிய மல்வீரர்களை அழைத்தான். "கண்ணனும் பலராமனும் யானைக்குத் தப்பித்து வந்தால் அவர்களை மற்போருக்கு அழைத்து அவர்கள் இருவரையும் கொன்றுவிடுங்கள்” என்று கூறினான்; அவர்களுக்குப் பரிசுகள் தருவதாகச் சாற்றினான். மேலும் தம் நண்பர்களை அழைத்துச் சிவன் கோயிலில் ‘வில் வேள்வி’ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினான்.

யது வமிசம் கண்ணன் பிறந்த குலம்; அதனால் அந்த வமிசத்தில் மிகவும் கண்ணியமானவராக மதிக்கப்பட்ட அக்குருவர் என்பவரை அழைப்பித்தான். அவர் வசுதேவருக்கு நெருங்கிய உறவினர், அவரிடம் தன் வேண்டுகோளைக் கூறினான்.

"நீர் யது குலத்தினருக்கும் போஜர்களுக்கும் வேண்டியவர். அதனால் எனக்கு நீர் ஓர் உதவியை மறுக்காமல் செய்ய வேண்டும்," என்றான். கம்சன் போஜர் பிரிவைச் சார்ந்தவன்.

"நீர் பிருந்தாவனம் சென்று பலராமனையும் கிருஷ்ணனையும் இங்கு அழைத்து வரவேண்டியது. சிவனுக்கு நடத்தும் 'வில் வேள்வி’ விழாவுக்கு நான் அழைத்தாகச் சொல்லுக, நீர் வரச் சொன்னால் அவர்கள் மறுக்க மாட்டார்கள்" என்று கூறினான்.

"என் நோக்கம் அவர்களை அழைப்பித்து வஞ்சமாகக் கொல்வது; கண்ணனால் எனக்கு மரணம் நேரும் என்று அசரீரி கூறி இருக்கிறது. நான் உயிர் வாழ வேண்டுமானால் அவர்களைக் கொன்று ஆக வேண்டியுள்ளது; என் மீது