பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇ 53


விரும்புகிறோம்; நீங்கள் தேரில் போகலாம்" என்று கூறி அவரை அனுப்பிவிட்டனர்.

கண்ணனும் பலராமனும் வந்திருக்கும் செய்தி நகர் எங்கும் பரவியது. அவனைப்பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த மக்கள் ஆடவரும், பெண்டிரும் திரள்திரளாய் வந்து அவனைப் பார்க்கக் கூடினர். மகளிர் அவன் பேரழகைக் கண்டு தம் மனத்தைப் பறிகொடுத்தனர். ஆடவர்கள் அவன் தோற்றத்தைக் கண்டு வியந்தனர். உடன் வந்த ஆயர் வீரர்களும் அவனோடு உடன் சென்றனர்.

நகரத்துக்குள் நுழைந்து சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில் துணி வெளுக்கும் சலவைத் தொழிலாளி ஒருவன் எதிர்ப்பட்டான்.

"எங்கே போகிறாய்? இந்த மூட்டைகள் யாருடையவை?" என்று கேட்டான் கண்ணன்.

"நான் துணிகள் வெளுப்பவன்; இவை கம்சனுடைய துணிகள்" என்றான்.

"எங்களுக்குச் சில உடைகள் தேவைப்படுகின்றன. கம்சனைக் காணப்போகிறோம்; நல்ல உடைகள் தேவைப் படுகின்றன" என்றான் கண்ணன்.

"அரசன் அணியும் ஆடைகள் இவை: ஆயர்குலச் சிறுவர் நீங்கள் அணிவது தகாது; தர முடியாது" என்றுரைத்தான். தம்மை இகழ்ந்து பேசியதால் அவன் தலையில் ஒரு தட்டுத் தட்டினான். கண்ணன் அடி தாங்க முடியாமல் அவன் தரையில் சாய்ந்து இறந்தான். கண்ணன் தனக்கு வேண்டிய மஞ்சள் பொன்னாடையையும், பலராமன் தான் விரும்பிய நீல நிற ஆடையையும் எடுத்துக் கொண்டனர்.