பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ◇ ராசீ


நன்கு உடுத்திக் கொண்டு சுதாமன் என்ற பெயருடைய பூக்காரன் ஒருவனைச் சந்தித்தனர்; இவர்களைக் கண்டதும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் மாலைகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கழுத்தில் அணிந்தான்; அவர்களின் அழகிய தோற்றத்தைக் கண்டு வியந்தான். "என் மாலைக்கேற்ற கழுத்து இப்பொழுதுதான் கிடைத்தது" என்று பாராட்டினான்.

அங்கிருந்து அவ்வழியே சென்று கொண்டிருந்த கூனி ஒருத்தியைச் சந்தித்தனர். அவள் அரசனுக்குச் சந்தனம் அரைத்துத் தருபவள்; கண்ணன் அவளிடம் அன்புகலந்த குரலில், "என்ன எடுத்துச் செல்கிறாய்" என்று கேட்டான்.

"சந்தனம்; அரசனுக்கு" என்றாள்.

"வந்தனம் யாம்; சந்தனம் எங்களுக்குத் தர முடியுமா” என்று கேட்டான்.

"நான் கொடுத்து வைத்தவள்; அழகிய உம் மார்பிற்கு என் சந்தனம் பூச ஒரு வாய்ப்புக் கிடைத்தது; அதுவே பெரு மகிழ்ச்சி."

"சந்தனம் இன்றுதான் பெருமை பெற்றது" என்றாள்.

அவள் தந்த மணங்கமழும் சந்தனத்தை இருவரும் பூசிக்கொண்டனர்.

அவள் கூனை நிமிர்த்துக் காணக் கண்ணன் விரும்பினான்; தன் நடுவிரலும் அடுத்த விரலும் துணையாகக் கொண்டு அவள் முகவாய்க் கட்டையை நிமிர்த்தினான்; கால் பெருவிரலால் அவள் காலை மிதித்தான்; கூன் நீங்க ஊன் உடம்பு பெற்றதன் பயனைக் கண்டாள்; அவள் கவர்ச்சி மிக்க வடிவம் பெற்றாள்.