பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ◇ ராசீ


இளைஞர்களை மோத விட்டது மாபெரும் தவறு" என்று பேசினர்; மன்னனை ஏசினர். முடிவில் சானுரன் பிணமாய் விழுந்தான். முட்டிகனோடு பலராமன் போர் செய்தான்; அவனைத் தீர்த்துமுடித்தான். மற்றும் வேறு இரு மல்லர்களையும் பலராமனே போர் செய்து உயிர் போக்கினான்.

இயமன் இந்த இளைஞர் வடிவில் தன்னை நோக்கி வருவதைக் கம்சன் பார்த்தான்; வாளை உறையினின்று எடுத்து இச்சிறுவர்களை ஒழித்துவிட்டு வசுதேவனையும், தேவகியையும், தன் தந்தை உக்கிரசேனனையும் ஒரு சேரத் தன் வாளுக்கு இரையாக்கத் தீர்மானித்தான். அவன் செயல்படும் வரை விட்டுவைக்கவில்லை. அவன் மார்பில் பாய்ந்து வயிற்றில் நெருப்பைப் போன்று இருந்த தம் கை முட்டியால் அவனை இருவரும் மாறிமாறிக் குத்திக் குருதி கக்க வைத்து இறுதியைத் தேடித் தந்தனர்.

கம்சனின் உடன்பிறந்த தம்பியர் எட்டுபேர்; அவர்கள் ஆற்றொணாத்துயர் அடைந்து அவலித்தனர். அவனுடைய மனைவியர் இருவர் அழுத அழுகைக்கு ஆறுதல் சொல்லச் சொற்கள் கிடைக்கவில்லை. மற்றவர் களுக்கு அவன் கொடியவனாய் இருந்தபோதிலும் மனைவியர்க்கு அன்புடையவனாகவே இருந்தான். மங்கலக் கோலம் இழப்பதற்கு அவர்கள் மிகவும் உயங்கினர்.

அவர்கள் இருவரும் மகத தேசத்து அரசனான சராசந்தனின் மகளிர்; ஒருத்தியின் பெயர் அஸ்தி, மற்றொருத்தியின் பெயர் பிராப்தி; இருவரும் விதவையாகி வந்த நிலையை அவர்கள் தந்தையால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. கண்ணனையும், மதுராவில் இருக்கும் யதுகுலத்தவர் அனைவரையும் வேரோடு அழித்து விடுவது என்று அவன் உறுதி கொண்டான்.