பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

 பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் எனப்படுகின்றன. வீர வரலாற்றைக் காவியமாகக் கூறினால் அஃது இதிகாசம் எனப்படுகிறது.
 இஃது இதிகாசம் ஆகாது; தெய்வக்கதை; தெய்வம் மானிடனாக அவதரித்து மனிதனைப் போல இயங்கி, தெய்வசக்தியோடு செயல்ஆற்றி வாழ்ந்த கதை இது.
 கண்ணனின் கதை. அவன் ஒரு மாவீரன் என்பதற்காகப் பேசப்படுவது இல்லை; பிள்ளைமை அழகுடையது. அனைவரையும் மகிழ்வித்தவன். 'வீரன்' என்றால், அஃது அருச்சுனனைத்தான் குறிக்கும்; அவன் செயல் சிறந்தது; அதற்கு வழிகாட்டி கண்ணன்; "வில் அம்பினைவிட அறிவு, கூர்மை வாய்ந்தது" என்பது இவனிடம் காணப்படுகிறது. வலிமை மட்டும் வெற்றியைத் தந்துவிடாது; அறிவுக் கூர்மை, "இதுவே வெற்றி தரும்" என்பதனைக் கண்ணன் கதை காட்டுகிறது.
 பிறந்த உடனே இடம் மாறிவிடுகிறான்; கம்சன் ஏமாற்றப்படுகிறான்; அவன் அறிவுத் திறன் அவன் குறும்புகளில் வெளிப்படுகிறது; "தீராத விளையாட்டுப் பிள்ளை; பெண்களுக்கு ஓயாத தொல்லை" என்ற பெயர் வாங்குகிறான்; யோகிகளைப் போலச் சிரிக்காமல் அவன் வாழவில்லை; "பெரியவர் என்றால் சிரிக்கக் கூடாது," என்ற போலித்தனம் அவனிடம் இல்லை; அவன் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு புதுமை, ஒரு சிரிப்பு, ஒர் அற்புதம், திடுக்க வைக்கும் சாதனைகள் இவை எல்லாம் அவனை நேசிக்கச் செய்கின்றன.