பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇ 59


அவன் அறுபத்துமூன்று அக்குரோணி அளவுள்ள சேனைகளோடு வந்து எதிர்த்தான். அத்தனை படைகளையும் கண்ணனும், பலராமனும் தம் தெய்வ சக்தியால் கொன்று குவித்து அவனை விரட்டி அடித்தனர். அப்பொழுதும் அவன் அடங்கவில்லை; மீண்டும் மீண்டும் சேனைகளைத் திரட்டிக்கொண்டுவந்து மோதிக் கொண்டே இருந்தான். இவ்வாறு அவன் பதினேழு முறை படை எடுத்தான். ஊர் மக்கள் இந்தப் போர்களினால் உயிர் இழப்பும், அழிவும் எய்தி அமைதியற்ற வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியது ஆயிற்று. எப்பொழுது சராசந்தன் படைகளோடு வருவானோ என்று அஞ்சி வாழ வேண்டியது ஆயிற்று.

அதே சமயத்தில் தெற்கே இருந்து மற்றோர் பகைமை உண்டாயிற்று. காலயவனன் என்னும் யவன தேசத்து அரசன், கண்ணனின் வீரத்தையும் தோள் வலிமையையும் மதுரா நகரின் செல்வ வளத்தையும் கேள்விப்பட்டுப் படையெடுக்க முயன்றான்.

இதற்கு ஒரு பின்னணி காரணம் ஆகியது.

யாதவ புரோகிதனான கார்க்கியர் என்னும் பிராமணரை அவருடைய மைத்துனன் ஒருவன் பலபேர் கூடியிருந்த சபையில் மனம் புண்படும்படி பேசிவிட்டான். அவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி அவர் ஒரு நபும்சகர் (பேடி) என்று இகழ்ந்து பேசி விட்டான். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. விந்திய பருவத்தின் தெற்கே இருந்து வந்த யாதவ குலத்தினரை எதிர்த்துப் பகைமை கொள்ளக்கூடிய வீரன் ஒருவன் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று மகாதேவனாகிய சிவனிடம் வேண்டினார்; அதற்காக இரும்பைப் பொடி செய்து அதைத் தின்று கொண்டு வலுப்பெற்று வந்தார். சிவனிடம் தனக்கு மகன் வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார்.