பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇63



அவர்களிடம் மிகவும் மரியாதை காட்டி நன்மை வரவு களை விசாரித்து அவர்கள் மனம் குளிரச் செய்தான்; பெரியவர்களையும், தன் இனத்து இளயவர்களையும் தழுவிக் கொண்டு அன்பு காட்டினான். சிறியவர்களோடு சிரித்துப் பேசினான்; கோபியர்களும் மிக அன்புடன் அவனிடம் நெருங்கிப் பழகினர். - கோபியர்மட்டும் சற்றுக் கோபம் உடையவர் போல் நடந்து கொண்டனர். "நகரத்து நாரிமணிகளைக் கண்டு பழகியபின் ஆயர்சேரியர் அலுத்துவிட்டு இருக்கும்" என்று உரையாடினர் சிலர். "சிரித்துப் பேசி எங்கள் நலனைக் கொள்ளை கொண்ட கண்ணன் சுகமா?" என்று கேட்டனர் சிலர். சில பெண்கள் கையில் வளையல்கள் இல்லை; "எங்கே வளையல்கள்?" என்று கேட்டதற்கு "அவனைப் பிரிந்து மெலிந்து விட்டோம்; அதனால் வளையல்கள் நெகிழ்ந்தன" என்றார்கள். நிறம் வெளுத்து ஒருத்தி காணப்பட்டாள். காரணம் என்ன? என்று கேட்டதற்குப் "பசலை பாய்ந்து விளர்த்து விட்டது" என்று விளக்கம் தந்தனர் சிலர். "இராதை எங்கே?' என்று கேட்டான். "கண்ணனை நினைத்துக்கொண்டு சித்தம் கலங்கிப் பித்தம் பிடித்து அவள் வேதனைப்படுகிறாள்" என்றனர் சிலர். "பட்டிக்காட்டுப் பெண்கள் என்று சொல்லி எங்களை நகரத்துப் பெண்களிடம் நகையாடிச் சிரிக்கின்றானா கண்ணன்?" என்று கேட்டனர் சிலர். மேலும் பலர் பலவிதமாகக் கேட்கத் தொடங்கினர்.