பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇5



 முடியில் மயிற்பீலி; மஞ்சள் நிற ஆடை; துளப மாலை; கையில் குழல்; அதில் எழுப்பும் ஓசை எங்கும் இன்பத்தை மூட்டுகிறது. அவன் குழல் இசை கேட்டு மயங்காதார் இல்லை; அந்த வகையில் அவன் ஒர் இசைக் கலைஞனாய் மற்றவர்களை மகிழ்விக்கிறான்; மகளிரோடு சேர்ந்து, குரவைக் கூத்து ஆடி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.
 அவன் சகடம் உதைத்ததும், பூதனையின் பால் உண்டதும், அவள் உயிரைச் சேரப் பருகியதும், மருத மரங்களை வீழ்த்தியதும், அசுரர்கள் பலரை இனம் தெரிந்து அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்ததும், இந்திரனுக்கு இட்ட சோறும் கறியும் தான் ஆயர்சிறுவர்களோடு உண்டதும், மலைப்பாம்பினைப் பிளந்ததும், நாரை வாயைக் கிழித்ததும், தேனுகளை விளவில் எறிந்து அழித்ததும் எல்லாம் திவ்விய பிரபந்தத்தில் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன.
 கண்ணன் பலதார மணம் புரிந்து, சாதனை படைத்த வனாய் விளங்குகிறான்; பதினாறாயிரம் கன்னியர் அவனைக் கணவனாய் வரிக்கின்றனர். ருக்குமணியை மணக்கிறான்; தொடர்ந்து சத்தியபாமை, சாம்பவதி இவ்வாறு எட்டு பேரை மணக்கிறான்; வாழ்க்கையின் சுகத்தை உதறித் தள்ளியவன் அல்லன், களங்கம் அறியாத யாதவக் கன்னியரை மகிழ்வித்தவன். 
 இராதை கண்ணனுடன் நெருங்கி ஆடிப் பாடி மகிழ்ந்தவள்; காதற் பறவைகளாய்ப் பழகியவர்கள்; அவன் அவளை மணக்கவே இல்லை; "உறவினை மறக்கவும் தெரியும்" என்று நடந்துகொண்டவன் அவன்.
 நப்பின்னை என்னும் நங்கையைப்பற்றித் தமிழ் நூலாகிய பிரபந்தம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. அவள் அவனுக்கு இளமைத் தோழி; வாழ்க்கைத் துணைவி.