பக்கம்:கண் திறக்குமா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

99

‘'சாந்தினி, நீ எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறாய்; இன்னும் செய்கிறாய், இதற்கெல்லாம் கைம்மாறாக உனக்கு நான் என்ன செய்யப் போகிறேனோ?’ என்றேன் நான்.

‘உங்கள் இதயத்தில் எனக்குக் கொஞ்சம் இடங் கொடுங்கள், போதும்!” என்றாள் அவள், எங்கேயோ பார்த்தபடி.

நான் அவளுடைய முகத்தைத் திருப்பி, ஏதோ சொல்ல முயன்றேன். ஆனால் வார்த்தைக்குப் பதில் கண்ணிர்தான் கசிந்தது.

‘களுக்கென்று சிரித்தபடி என் கண்ணிரைத் துடைத்துவிட்டு, ‘போய் வாருங்கள்!” என்றாள் அவள்.

நான் தயங்கினேன்; அவள் கலகல'வென்று சிரித்த வண்ணம் என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.

9. சிவகுமார லீலை!

அன்றிரவு ரயில் ஒடுவதாகவே எனக்குத் தோன்றவில்லை; சித்ராவைப் பார்ப்பதற்காக நான்தான் விழுந்தடித்துக்கொண்டு ஒடுவது போல் எனக்குத் தோன்றிற்று. அடுத்தநாள் காலை என் உள்ளத்தைச் சூழ்ந்திருந்த இருள் விலகாவிட்டாலும், உலகத்தைச் சூழ்ந்திருந்த இருள் விலகிவிட்டது. பரபரப்புடன் சோளகம்பட்டி ஸ்டேஷனை விட்டு இறங்கி, செய்யாமங்கலத்தை நோக்கி விரைந்தேன். அந்தக் கிராமத்தில்தான் குற்றாலலிங்கம் கொலு வீற்றிருந்தார். மணிமுடி தரிக்காத அந்த மன்னரின் ஆட்சியும் அங்கேதான் நடந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/102&oldid=1379439" இலிருந்து மீள்விக்கப்பட்டது