பக்கம்:கண் திறக்குமா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1OO

கண் திறக்குமா?



ஸ்டேஷனை விட்டு ஒரு பர்லாங் தூரங்கூடப் போயிருக்க மாட்டேன் - “ஐயோ, என்னடி செய்வேன்?” என்ற தீனக்குரல் என் காதில் விழுந்தது; அதைக் கேட்ட பிறகு என்னால் மேலே ஒர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. திரும்பிப் பார்த்தேன்; எனக்குச் சற்றுத் தூரத்தில் ஒர் இளம் பெண் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்து கிடந்தாள். அவளுக்குப் பக்கத்தில் முதியவள் ஒருத்தி நின்று தவித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கையில் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளங் குழந்தை ஒன்று எந்தவிதமான சலனமும் இல்லாமல் புன்னகை பூத்துக் கொண்டிருந்தது - நான் அவர்களை நெருங்கினேன். என்னைக் கண்டதும் அந்த முதியவள் திடுக்கிட்டாள்; பிறகு கையிலிருந்த குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு மூர்ச்சையுற்றுக் கிடந்த பெண்னைத் துக்கித்தன்தோளின் மேல் சாய்த்துக்கொண்டாள்.

“என்ன உடம்புக்கு?’ என்று விசாரித்தேன்.

‘ஒன்றுமில்லை...’ என்று இழுத்துக்கொண்டே, அவள் என்னை அச்சத்துடன் பார்த்தாள்; காரணம் என்ன என்று தெரியாமல் நான் திகைத்தேன். அவள் என்னைப் பொருட்படுத்தாமல், “செங்கமலம், செங்கமலம்’ என்று நாலைந்து முறை தன் தோளின்மேல் கிடந்த பெண்ணைக் கூப்பிட்டுப் பார்த்தாள்; பதில் இல்லை.

பழையபடி அந்தப் பெண்ணைக் கீழே கிடத்திவிட்டு அவள் ஸ்டேஷனை நோக்கி விரைந்தாள்.

“எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

அவள் திருதிருவென்று விழித்துக்கொண்டே ‘ஒரு சோடாவாவது வாங்கிக்கொண்டு வரலாமென்று போகிறேன்!” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

‘நீங்கள் இங்கேயே இருங்கள்; நான் வாங்கிக் கொண்டு வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு ஓடினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/103&oldid=1379111" இலிருந்து மீள்விக்கப்பட்டது