பக்கம்:கண் திறக்குமா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

105

தானே சிரிக்கிறது? சிவகுமாரனைப் போன்றவர்களைப் பார்த்துச் சிரிக்கவில்லையே? - அப்படிப்பட்ட வஞ்சக உலகத்துக்கு நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும்?”

‘வேறு வழி? - இங்கே ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமாக வைத்துக்கொண்டிருக்கும் வரை எங்களைப் போன்றவர்கள் மானத்தைக் காத்துக் கொள்ளச் சாவைத்தானே தழுவவேண்டியிருக்கிறது!”

‘ஆண்கள் மானத்தைக் காத்துக் கொள்ளச் சாவைத் தழுவாமலிருக்கும் போது பெண்கள் மட்டும் ஏன் தழுவ வேண்டும்? அதைப் பற்றி அவர்களுக்கு இல்லாத கவலை உங்களுக்கு மட்டும் என்னத்துக்கு?’

‘ஊராரின் வாயை மூடத்தான்!”

‘ஊரார், ஊரார், ஊரார்! - அவர்கள் வேறு, நாம் வேறா? நீங்களும் நானும், இன்னும் உங்களைப் போன்றவர்களும், என்னைப் போன்றவர்களும் சேர்ந்தவர்கள் தானே ஊரார்? - அப்படியிருக்கும்போது நமக்கு நாமே பயந்து சாவதில் என்ன அர்த்தமிருக்கிறது? காலமெல்லாம் ஊராருக்கும் உலகத்தாருக்கும் அஞ்சி நாம் செத்துக் கொண்டிருந்தால் வாழ்வது தான் எப்போது?’’

‘உங்களைப்போல் ஊரில் ஒரு சிலர் இருக்கலாம்; மற்றவர்கள்...”

‘மற்றவர்களை நீங்கம் மனம் வைத்தால் மாற்றி விடலாம். அதற்கு உங்களைப் போன்றவர்கள் துணிந்து காரியத்தில் இறங்க வேண்டும். ஆனால் அந்தக் காரியத்தை நீங்கள் ரகசியமாக செய்யக் கூடாது; பகிரங்கமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் ஊரும் உலகமும் உங்களைப் பார்த்து வெட்கித் தலை குனியும்; விபசாரி என்ற வீண் பழியும் நாளடைவில் மறைந்தொழியும்; சிவகுமாரனைப் போன்ற சண்டாளர்களும் சீர்திருந்தி விடுவார்கள்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/108&oldid=1379079" இலிருந்து மீள்விக்கப்பட்டது