பக்கம்:கண் திறக்குமா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

கண் திறக்குமா?




அவளைப் பற்றி ஏற்கெனவே எனக்குச் சந்தேகம் - அடிக்கடி எங்கிருந்தோ அவளுக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன என்ன கடிதம்?’ என்று கேட்டால், “சொந்த விஷயம்’ என்பாள். அந்தச் சொந்த விஷயத்தின் பலன் தான் போலிருக்கிறது, நேற்றிரவிலிருந்து அவளைக் காணோம்.’

‘'காணவில்லையா!’

“ஆமாம். சிவகுமாரன் பசி, தூக்கத்தைக்கூட மறந்து அவளைத் தேடு, தேடு என்று தேடியலைகிறான் - அவனை எதிர்பார்த்துக்கொண்டுதான் நான் தெருவில் நின்று கொண்டிருந்தேன்; அப்போதுதான் நீ அந்த நாய்களின் சமாசாரத்தை எடுத்துக்கொண்டு வந்தாய்! - அந்த வயிற்றெரிச்சலில் நான் இதுவரை சித்ராவைப்பற்றி உன்னிடம் ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டேன்!’ என்றார் அவர்,

எனக்கு விஷயம் விளங்க வெகு நேரம் ஆகவில்லை. சாந்தினி எழுதிய கடிதங்களை யாரோ காதலன் எழுதியதாக இந்த மனிதர் நினைத்துக்கொண்டு விட்டார். அதற்கேற்றாற்போல் இவர்மீதிருந்த வெறுப்பின் காரணமாக அந்தக் கடிதங்களைச் சித்ரா இவரிடம் காட்டாமல் இருந்திருக்க வேண்டும் - தன்னந்தனியாகவே இந்த வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவதற்கு வேண்டிய தைரியத்தைக்கூட அல்லவா இவர்களுடைய உபத்திரவம் அவளுக்கு அளித்திருக்கிறது! - இவ்வாறு எண்ணி நான் துடித்துக் கொண்டிருந்தபோது. ‘என்னப்பா, யோசிக்கிறாய்?’’ என்று கேட்டார் அவர்.

‘ஒடிப்போன பிறகும் உங்கள் திருக்குமாரனால் அவளை மறக்க முடியவில்லையே, அதைப் பற்றித்தான் யோசிக்கிறேன்!” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு, நான் அங்கிருந்து விர்ரென்று கிளம்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/117&oldid=1379054" இலிருந்து மீள்விக்கப்பட்டது