பக்கம்:கண் திறக்குமா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கண் திறக்குமா?

சேர்ந்து விட்டாள் - சாந்தினி’ என்று அந்தத் தந்தியில் கண்டிருந்தது.

‘விட்டது கவலை!’ என்று நான் திரும்பினேன்; செங்கமலத்தின் தாயார் பீதி நிறைந்த கண்களுடன் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஏன் இப்படிப் பயந்து சாகிறீர்கள்? பெட்டியில்தான் நம்மைத் தவிர வேறு யாரும் இல்லையே?’ என்றேன் நான்.

‘'வேறு யாருக்கும் பயப்படவில்லை; உங்களுக்குத் தான் பயப்படுகிறேன் - நீங்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளக்கூடாது; ஊர் வாயை மூடவே இப்படிச் செய்கிறேன்!’ என்று சொல்லிக்கொண்டே, அவள் அத்தனை நேரமும் மடியில் ஒளித்து வைத்திருந்த தாலிக் கயிற்றை எடுத்தாள்; ஏற்கெனவே அதில் முடிந்து வைத்திருந்த மஞ்சளை ஒரு கணம் பார்த்தாள்; மறுகணம் என்ன காரணத்தாலோ கலங்கிய கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டு, தன்னையே சிவகுமாரனாகப் பாவித்துக்கொண்டு, செங்கமலத்தின் கழுத்தில் அவள் தாலியைக் கட்டினாள்!

அப்போது அந்த அபலையின் முகத்தில் பிரதிபலித்த வேதனையை என்னால் சகிக்க முடியவில்லை; கண்ணை மூடிக்கொண்டேன் - அடுத்த நிமிஷம் அவள் வாய்விட்டு அழுதது என் காதில் விழுந்தது - கண்ணைத் திறந்தேன்; செங்கமலத்தின் தாயார் நக்கென்று அவள் கன்னத்தில் ஒர் இடி இடித்து, ‘என் மானத்தை வாங்காதேடி, என்னைச் சந்தியில் இழுத்து வைக்காதேடி!’ என்றாள் ஆத்திரத்துடன்.

என்னால் பொறுக்க முடியவில்லை. ‘அம்மா, இவ்வளவு பெரிய உலகத்தில் நீங்கள் ஒருவர்தான் அந்த ஜீவனிடத்தில் அன்பு காட்டுவதற்கு இருக்கிறீர்கள்; நீங்களும் வெறுத்தால் அவள் என்ன செய்வாள்?’ என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/119&oldid=1379067" இலிருந்து மீள்விக்கப்பட்டது