பக்கம்:கண் திறக்குமா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

 “என்ன ஒஹோ! - உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் சட்டம் படித்தவர் என்று நான் கேள்விப்பட்டேனே!’ என்றாள் அவள்.

‘வகுப்பு வாதி’ என்ற வஞ்சகர்களின் பட்டத்துக்கு அஞ்சி நான் அந்தச் சமயம் ஒன்றும் சொல்லவில்லை; பேசாமல் இருந்தேன்.

‘அதனால் தான் இந்தக் கதிக்கு நாங்கள் ஆளானோம். இல்லையென்றால் உங்கள் அருமை மாமாவை நாங்கள் ஏன் தஞ்சமடைந்திருக்கப் போகிறோம்? அவர் வீட்டு வேலைக்காரிகளாயிருந்து இந்தக் கதிக்கு ஏன் ஆளாகியிருக்கப் போகிறோம்?’ என்று தன் கதையை முடித்தாள் அவள்.

அதற்குள், எங்களை ஏற்றிக்கொண்டு வந்த ரயில் சென்னை எழும்பூர் ஸ்டேஷனை அடைந்தது.

முதலில்: நான் இறங்கினேன் - என்ன அதிசயம், இது! எங்கிருந்தோ பாலு ஒடோடியும் வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கி, ‘ஹெல்லோ செல்வம், செளக்கியமா?” என்று விசாரித்தான்.

"ஹெல்லோ என்னப்பா ஹெல்லோ? நீங்கள்தான் இங்கிலீஷ்காரனை இந்தியாவிலிருந்து விரட்டப் போகிறீர்களோ?’ என்றேன் நான்.

அதற்குள் ‘சித்தி!’ என்று ஒரே கத்தாய் கத்தினான் அவன். திரும்பிப் பார்த்தேன்; ‘'என்னடா பாலு, செளக்கியமா?’ என்றாள் செங்கமலத்தின் தாயார்.

அதிசயத்திற்கு மேல் அதிசயம்! - எங்கே செங்கமலம்? - சுற்றுமுற்றும் பார்த்தேன்; குழந்தையுடன் ஒடோடியும் சென்று அவள் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்து விட்டாள் - அண்ணனுக்கு அஞ்சித்தான்!



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/125&oldid=1379453" இலிருந்து மீள்விக்கப்பட்டது