பக்கம்:கண் திறக்குமா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கண் திறக்குமா?

நடுவில்தான் சேர்ந்தேன் - அதாவது, தேசீயம் என்றால் என்ன? பொதுஜன சேவை என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? என்பதைப் பற்றி எல்லாம் மிகமிக நன்றாகத் தெரிந்து கொண்ட பிறகுதான் சேர்ந்தேன். இல்லையென்றால் இந்த உலகத்தில் நான் இன்பத்தைக் கண்டிருக்க முடியாது; என்னதான் தியாகம் செய்திருந்தாலும் தியாகி என்ற பெயரைக்கூட நான் பெற்றிருக்க முடியாது.

“இங்கே துன்பம் அனுபவித்தால் என்ன, அங்கே இன்பம் அனுபவித்துக் கொள்ளலாம்!” என்று நானும் உங்களைப்போலச் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு உங்களுடைய மனம் இடங் கொடுப்பதுபோல என்னுடைய மனம் இடங் கொடுக்கவில்லை. காரணம் அவ்வாறு கூறுவோரின் கூற்றில் நான் துளியாவது உண்மையைக் காண முடியாமற் போனதுதான்!

மேலும், அந்தப் புண்ணியாத்மாக்கள் வாயளவில்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, செயலளவில் இந்த உலகத்திலேயே தாங்கள் விரும்பும் இன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பதற்கு வேண்டிய முயற்சிகளில் பெரிதும் ஈடுபட்டிருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயத்தில் அவர்கள் சட்டத்தை அலட்சியம் செய்தார்கள்; சமூகக் கட்டுப்பாட்டை அலட்சியம் செய்தார்கள். சாஸ்திரத்தை அலட்சியம் செய்தார்கள்; சாட்சாத் கடவுளையே கூட அவசியம் நேரும் போதெல்லாம் அலட்சியம் செய்தார்கள்! - இதில் வேடிக்கை என்னவென்றால், தங்களுடைய முறையையே வேறு யாராவது பின்பற்றும் போது, “போச்சு, போச்சு, எல்லாம் போச்சு!” என்று அவர்கள் அர்த்தமில்லாமல் கூச்சல் போட்டார்கள்.

இவர்களுடைய கூச்சலைக் கேட்டு நான் உங்களைப் போல் கலங்கிவிடவில்லை. “என்ன போச்சு. எங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/13&oldid=1379250" இலிருந்து மீள்விக்கப்பட்டது