பக்கம்:கண் திறக்குமா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

127


தாயாரும் அப்போது கொஞ்சம் திணறத்தான் வேண்டியிருந்தது.

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு சித்ராவைப் பார்க்கப் போகிறோம் - அவளுடைய உள்ளமும் உடலும் எப்படி எப்படியெல்லாம் மாறுதல் அடைந்திருக்குமோ? இந்த அருமை அண்ணனைக் கண்டதும் அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வருமோ, அல்லது ஆனந்தம் பொங்கிக் கொண்டு வருமோ? பெற்ற தாயார், உடன் பிறந்த சகோதரிகள் இவர்களைத் தவிர வேறு எந்தப் பெண்களைக் கண்டாலும் ‘மனைவி முறை' கொண்டாட விரும்பும் ஈனர்கள் நிறைந்த இந்த உலகிலே, தன்னந் தனியாக வாழ நேர்ந்த அவளுக்கு என்னென்ன சோதனைகளெல்லாம் ஏற்பட்டிருக்குமோ? பெற்ற தாயைப் பிரிந்து, பிறந்த வீட்டை மறந்து, பணச் செருக்கால் மனிதத் தன்மையையே இழந்துவிட்ட அந்தப் பாவிகளிடம் அடைக்கலம் புகுந்த அவள் எப்படிப்பட்ட கொடுமைகளுக்கெல்லாம் உள்ளாக நேர்ந்ததோ? - இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.

சித்ரா என்னைப் பார்த்தாள்; பார்த்தது, பார்த்தபடி ஒரு கணம் அப்படியே நின்றாள்.

அவளுக்கு ஆனந்தம் பொங்கிக் கொண்டு வரவில்லை; ஆத்திரந்தான் பற்றிக்கொண்டு வந்தது. ஆனால் அந்த ஆத்திரத்தில் கோபத்தைக் காண முடியவில்லை; துக்கத்தைத்தான் காண முடிந்தது.

‘சித்ரா’ என்றேன் நான் தழுதழுத்த குரலில். ‘இன்னொரு முறை என்னை விட்டுப் பிரிய நேரும் போது எனக்கு நீங்கள் ஒரு சிறு உதவி செய்ய வேண்டும். அண்ணா!’ என்றாள் அவள் விம்மிக் கொண்டே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/130&oldid=1379094" இலிருந்து மீள்விக்கப்பட்டது